2016-06-16 16:29:00

கீழைத் திருஅவைகளுக்கு ROACO ஆற்றும் உதவிகளுக்கு நன்றி


ஜூன்,16,2016. கேரளாவைத் தவிர, இந்தியாவின் பிற பகுதிகளில் சீரோ-மலபார், சீரோ மலங்கராத் திருஅவைகளின் இருப்பு குறித்து, ROACO அமைப்பு கவனம் செலுத்தி கலந்துரையாடியதற்குத் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோமையில் இவ்வாரத்தில் கூட்டம் நடத்திய ROACO அமைப்பின் 90 பிரதிநிதிகளை, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இத்திருஅவைகள் ஒவ்வொன்றுக்கும் உரிய உரிமைகளை மதிப்பதில் முன்னேற்றம் காணப்பட்டு வருவது, நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது என்று கூறினார்.

மேலும், இலத்தீன் மற்றும் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கர் அருகருகே வாழும் உலகின் அனைத்துப் பகுதிகளில், தலைமுறை தலைமுறையாக நாம் பெற்ற, கிழக்கு மற்றும் மேற்கத்திய ஆன்மீக வளங்கள் நம் திருஅவைகளுக்குத் தேவைப்படுகின்றன என்பதையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

ROACO என்ற கீழைத் திருஅவைகளுக்கு உதவிசெய்யும் அமைப்பினர் ஆற்றிவரும் பணிகளுக்கு, சிறப்பாக, புனித பூமியிலுள்ள பெத்லகேம் இயேசு பிறப்பு ஆலயம் மற்றும் எருசலேம் திருக்கல்லறை ஆலயத்திலுள்ள கிறிஸ்துவின் திருக்கல்லறை சிறிய பசிலிக்காவைச் சீரமைப்பதற்கு இவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை.

ROACO அமைப்பினர் வத்திக்கானில் கடந்த திங்களன்று தொடங்கிய மாநாடு, இவ்வியாழனன்று நிறைவடைந்தது. இதில், எருசலேம், லெபனான், சிரியா, உக்ரைன், ஈராக் மற்றும் ஜோர்டான் நாடுகளின் திருத்தந்தையின் பிரதிநிதிகள், புனித பூமியின் புதிய பிரான்சிஸ்கன் பொறுப்பாளர் அருள்பணி பிரான்செஸ்கோ பேட்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.