2016-06-17 16:59:00

கல்வி சமுதாயத்தில் பெண்களை முன்னேற்றும்,பேராயர் Jurkovič


ஜூன்,17,2016. சமய நம்பிக்கைகளோடு தொடர்புடையவை உட்பட, உண்மையான விழுமியங்களில் ஒரு சமுதாயத்தை அமைப்பதற்கு, பெண்களை மதிப்பதும், அவர்களை இணைத்துச் செயல்படுவதும் அடிப்படையானவை என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

மனித உரிமைகள் அவையின் 32வது அமர்வில், 2030ம் ஆண்டு வளர்ச்சித்திட்ட இலக்கில் பெண்களின் உரிமைகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களின் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Ivan Jurkovič அவர்கள் இவ்வாறு கூறினார்.

சமுதாயத்தில் பெண்களை முன்னேற்றும் கூறுகளில் கல்வி மிக முக்கியமானது என்றும், இது, பெண்கள் எதிர்கொள்ளும் சமத்துவமின்மையையும், வன்முறையையும் குறைக்கும் என்றும் கூறினார் பேராயர் Jurkovič.  

மனிதக் குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மனிதரின் மாண்பு குறித்து 2030ம் ஆண்டு வளர்ச்சித்திட்ட இலக்கில் அதிகமாக வலியுறுத்தப்பட்டாலும், இன்றும் உலகில் பல பெண்கள் தங்களின் அடிப்படை உரிமை மீறல்களால் துன்புறுகின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டினார் பேராயர் Jurkovič.

உலகில் கத்தோலிக்கத் திருஅவை நான்கு இலட்சம் ஆரம்ப மற்றும் நடுத்தர பள்ளிகளை நடத்துகின்றது என்றும் பேராயர் Jurkovič கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.