2016-06-17 16:42:00

வத்திக்கான் உதவியுடன் மேலும் 9 பேர் லெஸ்போசிலிருந்து உரோம்


ஜூன்,17,2016. “இரக்கமுள்ள அன்பால் முழுவதும் நிறைந்துள்ள இறைவனின் கருணையை செபத்தில் நாம் அனுபவிப்போமாக” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு உரோம் திரும்பியபோது தன்னோடு மூன்று புலம்பெயர்ந்தவர் குடும்பங்களை அழைத்து வந்தார். அதைத்தொடர்ந்து, லெஸ்போஸ் தீவிலிருந்து, இவ்வியாழனன்று, இரு கிறிஸ்தவர்கள் உட்பட ஒன்பது புலம்பெயர்ந்தவர்கள் உரோம் வந்துள்ளனர். இவர்கள் சிரியாவைச் சேர்ந்தவர்கள். உரோம் சான் எஜிதியோ குழு இவர்களுக்கு குடியிருப்பு வசதிகளை வழங்கும். வத்திக்கான் காவல்துறையினர், சான் எஜிதியோ மற்றும் கிரேக்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன், இவர்களை ஏத்தென்சிலிருந்து உரோமைக்கு அழைத்து வந்துள்ளனர்.  

இன்னும், ஜூன் 18, இச்சனிக்கிழமை மாலையில் உரோம் Villa Nazareth  இல்லத்தைப் பார்வையிடச் செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மாலை 4.45 மணிக்கு சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து காரில் புறப்படும் திருத்தந்தையுடன் கர்தினால் Achille Silvestrini, பேராயர் Claudio Maria Celli ஆகிய இருவரும் செல்கின்றனர்.

வில்லா நாசரேத்தின் அறுபதாம் ஆண்டு நிறைவாக, அங்குச் செல்லும் திருத்தந்தை, அங்கு நடைபெறும் சந்திப்பில், ஏழு பேரின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். இச்சந்திப்பை நிறைவு செய்து மாலை 7 மணிக்கு வத்திக்கானுக்குப் புறப்படுவார்.

1963ம் ஆண்டு, சனவரி 13ம் தேதி, “வில்லா நாசரேத்” எனப்படும் நாசரேத் திருக்குடும்ப இல்லத்தை நிறுவனத்தை அங்கீகரித்தார். அநாதைப் பிள்ளைகள் மற்றும் ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் இறையழைத்தலைப் பெற்று, திருஅவைக்கும் சமுதாயத்திற்கும் பணியாற்றும் நோக்கத்தில், முதலில், 1946ம் ஆண்டில் இவ்வில்லத்தை உருவாக்கினார் அருள்பணி Domenico Tardini. பின்னாளில் இவர் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் காலத்தில் திருப்பீடச் செயலராகப் பணியாற்றினார். இவர் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். கர்தினால் Tardini அவர்கள், 1961ம் ஆண்டில் இறந்த பின்னர், இவ்வில்லம் நெருக்கடியைச் சந்தித்தது. பின்னர் அருள்பணி Achille Silvestrini அவர்கள் இவ்வில்லத்தை மீண்டும் நடத்தினார். 1983ம் ஆண்டில் இவ்விடம், மீண்டும் திறக்கப்பட்டது. மாணவிகளும் முதல் முறையாக அனுமதிக்கப்பட்டனர்.  தற்போது, இது திருப்பீடச் செயலகத்தின் மேற்பார்வையிலுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.