2016-06-18 13:45:00

அர்மேனியாவில் சமய வேறுபாடின்றி திருத்தந்தைக்கு வரவேற்பு


ஜூன்,18,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 24 முதல் 26 வரை அர்மேனியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தை சமய வேறுபாடின்றி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்மேனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டதை, இனப்படுகொலை என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கீகரித்திருப்பதற்கே, அவரை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்போம் என்று, அர்மேனிய கத்தோலிக்கப் பேராயர் Raphael Minassian அவர்கள் தெரிவித்தார்.

திருத்தந்தையின் அர்மேனிய திருத்தூதுப் பயணம் பற்றி, Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்திடம் பேசிய பேராயர் Minassian அவர்கள், அர்மேனியாவில், கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் சபையினர் என்ற வேறுபாடின்றி எல்லாரும் இப்பயணத்தை எதிர்நோக்கி இருப்பதாகக் கூறினார்.

அர்மேனியர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்த திருத்தந்தை வருகிறார் என்றும், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட, அர்மேனிய மக்களுக்கு எதிரானப் படுகொலைகளை, 20ம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதல் படுகொலை என்று திருத்தந்தை கூறியிருப்பது, அர்மேனியர்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் கூறினார் பேராயர் Minassian.

1915ம் ஆண்டு ஏப்ரலில், முஸ்லிம்களால் அர்மேனியர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட அடக்குமுறைகளில், ஆறு இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் நான்கு இலட்சம் பேர் நாடு கடத்தப்பட்ட பயணத்தில் இறந்தனர். இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள், கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டவர்கள் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.