2016-06-18 13:58:00

கட்டாயமாகப் புலம்பெயரும் மக்களுக்கு ஆதரவளியுங்கள்


ஜூன்,18,2016. ஜூன் 20, வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படும் உலக புலம்பெயர்ந்தவர் தினத்தை முன்னிட்டு, அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் இசைக் கலைஞர்கள், புலம்பெயரும் மக்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கையில் இணைந்துள்ளனர்.

கட்டாயமாகப் புலம்பெயரும் மக்களின் நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்த விண்ணப்பிக்கும், புலம்பெயர்ந்தவர், சமயத் தலைவர்கள் மற்றும் ஐ.நா. புலம்பெயர்ந்தவர் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கையில், பல்வேறு கலைஞர்களும் இணைந்துள்ளனர்.

இந்நடவடிக்கை பற்றிப் பேசிய, UNHCR என்ற ஐ.நா. புலம்பெயர்ந்தவர் நிறுவன இயக்குனர் Filippo Grandi அவர்கள், உலகில், போர்களும், துன்பங்களும் அதிகரித்துவரும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம், இவை புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன என்றார்.

ஐ.நா.வும், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளும், 2001ம் ஆண்டிலிருந்து, ஜூன் 20ம் தேதியன்று உலக புலம்பெயர்ந்தவர் தினத்தைக் கடைப்பிடித்து வருகின்றன.  

உலகில், 5 கோடியே 95 இலட்சம் பேர், கட்டாயமாகப் புலம்பெயர்ந்தவர்கள், இவர்களில், ஏறத்தாழ 2 கோடிப் பேர் அகதிகள் மற்றும் ஒரு கோடிப் பேர் நாடுகளின்றி இருப்பவர்கள். ஒரு நாளைக்கு 42,500 பேர் வீதம், பாதுகாப்புத் தேடி, தங்கள் நாடுகளின் அல்லது பிற நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கின்றனர். உலகின் அகதிகளில் 86 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வரவேற்கப்பட்டுள்ளனர். உலகிலுள்ள 2 கோடி அகதிகளுள் 51 விழுக்காட்டினர் 18 வயதுக்குட்பபட்டவர்கள். இவ்வாறு மேலும் பல விபரங்களை வெளியிட்டுள்ளது UNHCR நிறுவனம்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.