2016-06-20 16:17:00

நம் எல்லாரைப் போலவே, புலம்பெயர்ந்தவர்களும் மக்கள்தான்


ஜூன்,20,2016. ஜூன் 20, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக புலம்பெயர்ந்தவர் தினத்தை, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

மற்ற எல்லாரைப் போலவே, புலம்பெயர்ந்தவர்களும் மக்கள்தான். ஆனால், இவர்கள், தங்களின் வீடுகள், வேலை, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, போரில் பலரை இழந்தவர்கள். இம்மக்களின் கதைகளும், அவர்களின் முகங்களும், நீதியில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நம் அர்ப்பணத்தைப் புதுப்பிக்க நம்மை அழைக்கின்றன. நாம் அவர்களோடு இருக்கவும், அவர்களைச் சந்திக்கவும், அவர்களை வரவேற்கவும்,  அவர்கள் பேசுவதைக் கேட்கவும் விரும்புகிறோம். கடவுளின் திட்டத்திற்கு ஒத்திணங்கும் வகையில், நாம் அமைதியின் ஆர்வலர்களாக மாற வேண்டும்" என்றார் திருத்தந்தை.

இவ்வாண்டு இவ்வுலக தினத்தையொட்டி புள்ளி விபரங்களை வெளியிட்ட UNHCR நிறுவனம், உலகில் முதன்முறையாக, கடந்த ஆண்டில் புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை ஆறு கோடிக்கும் அதிகமாகியுள்ளது என்று கூறியுள்ளது. இவ்வெண்ணிக்கை, 2015ம் ஆண்டில், ஆறு கோடியே 53 இலட்சமாகும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.