2016-06-22 16:11:00

அருள்பணியாளரைத் தாக்கியவர் கைது செய்யப்பட வேண்டும்


ஜூன்,22,2016. வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில், பெரிய கோடரி போன்ற ஆயுதத்தால் அருள்பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அருள்பணியாளரைத் தாக்கியவர் கைது செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் அம்மாநில கத்தோலிக்க ஆயர் ஒருவர்.

இத்தாக்குதல் கிறிஸ்தவ சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாகத் தெரிவித்த, Tezpur ஆயர் Michael Akasius Toppo அவர்கள், இந்தப் பகுதியில் இப்படி நடந்திருப்பது இதுவே முதன்முறை என்றும் கூறினார்.

ஜூன் 19, கடந்த ஞாயிறன்று, Tezpur மறைமாவட்டத்தின் Bhirobkhund பங்குக்குரு Sushil John Soren அவர்கள், தனது இடத்திற்கு அருகிலுள்ள மாணவர் விடுதியில் செப வழிபாடு நடத்தித் திரும்பியபோது, ஒரு மர்ம மனிதர் அவரைப் பின்தொடர்ந்து, பெரியதொரு கத்தியால் தாக்கினார். தனது தலையைப் பாதுகாக்க முயற்சித்த அருள்பணி Sushil அவர்களின் இரு கைகளும் பலத்த காயமடைந்துள்ளன. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இத்தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்றும், தாக்கியவரை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறினார் ஆயர் Toppo.

மேலும், இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் ஆயர் Theodore Mascarenhas அவர்களும், கடவுளின் மனிதரைத் தாக்கியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது என்று கூறியுள்ளார்.  

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.