2016-06-22 16:06:00

பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள் அமைதிக்காக செபம்


ஜூன்,22,2016. பங்களாதேஷ் நாட்டில், சமயத் தீவிரவாதமும், திட்டமிட்ட கொலைகளும் அதிகமாகிவரும்வேளை, அந்நாட்டில் தீவிரவாத வன்முறை நிறுத்தப்படுவதற்கு விண்ணப்பித்து, அமைதிக்காக செபித்தனர் கிறிஸ்தவர்கள்.

பங்களாதேஷின் கிறிஸ்தவ சபைகள் இணைந்த பெரிய கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு கேட்டுக்கொண்டதன்பேரில், நாடெங்கும், கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர் என, அனைவரும் செபித்தனர்.

டாக்காவின் Tejgaon செபமாலை அன்னை கத்தோலிக்க ஆலயத்தில், பல்வேறு கிறிஸ்தவ சபையினர் பங்குகொண்ட செப வழிபாட்டை தலைமையேற்று நடத்திய, டாக்கா பேராயர் பாட்ரிக் டி ரொசாரியோ அவர்கள், அமைதிக்காக விண்ணப்பித்தார்.

மதத்தை உண்மையாகப் பின்பற்றும் ஒருவர், மதத்தின் பெயரால் பிறரைக் கொலை செய்ய மாட்டார் மற்றும் பிற மதத்தவரின் உரிமைகளை மீறமாட்டார் என்றுரைத்த பேராயர் டி ரொசாரியோ அவர்கள், இந்த வன்முறைகளையும், கொலைகளையும் கிறிஸ்தவ சமூகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறினார்.

பங்களாதேஷில், 2013ம் ஆண்டுக்குப் பின்னர், சுன்னிப்பிரிவு முஸ்லிம்களால், பிற முஸ்லிம் பிரிவினரும், மதத்தவரும் என, குறைந்தது நாற்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.    

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.