2016-06-27 15:56:00

எதிரிகளை மன்னிக்க அர்மேனியா முன்வந்துள்ளது, எடுத்துக்காட்டு


ஜூன் 27, 2016. அர்மேனியத் திருப்பயணத்தின்போது தனக்களித்த வரவேற்புரையில் அந்நாட்டு அரசுத்தலைவர், அந்நாட்டு மக்களை நோக்கி, கடந்த காலத் தவறுகளுக்கு மன்னிப்பை வழங்கி, வருங்காலத்தை நோக்கி நடைபோடுவோம் என கூறிய வார்த்தைகள், மன்னிப்பின் வலிமையை காட்டும் அடையாளமாக உள்ளன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்மேனிய நாட்டுக்கான திருத்தூதுப்பயணத்தை முடித்து திரும்பும் வழியில் விமானத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எண்ணற்ற துன்பங்களை அனுபவித்துள்ள ஒரு நாட்டு மக்கள், பிறரை மன்னிக்க தாங்களே முன்வந்துள்ளது, அர்மேனிய நாட்டின் மன வலிமையைக் காட்டுவதாக உள்ளது என்றார்.

அர்மேனியாவிற்கான மூன்று நாள் திருத்தூதுப்பயணம் குறித்து மட்டுமல்ல, விரைவில் இடம்பெற உள்ள அசர்பைஜான் மற்றும் போலந்து நாட்டுக்கான திருத்தூதுப்பயணங்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஐரோப்பிய ஐக்கிய அவையிலிருந்து பிரிட்டன் வெளியேற விரும்புவது, ஒரே பாலின நடவடிக்கையாளர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு, திருஅவையில் சீர்திருத்தங்கள் போன்றவை குறித்தும் பத்திரிகையாளர்களுடன் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை இன்றைய திருஅவைக்கு ஒரு ஞானமுள்ள தாத்தாவாக மட்டுமல்ல, தனக்கு ஒரு செபப் பலமாகவும் இருப்பதாகக் கூறினார்.

ஆர்த்தடாக்ஸ் திருஅவைகள் ஒன்று கூடி, கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்து விவாதித்து வருவது நல்லதொரு எடுத்துக்காட்டாகவும், கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான நம்பிக்கையாகவும் உள்ளது எனவும் கூறினார் திருத்தந்தை.

ஐரோப்பிய அவையிலிருந்து பிரிட்டன் வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கும் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாட்டிற்கும் தனிக் கலாச்சாரங்களும், தனி அணுகுமுறைகளும் உள்ளதை மதிக்கும் அதேவேளை, சுவர்களை விட பாலங்களே பலன் தர வல்லவை என்பதை நாம் உணரவேண்டும் எனவும், தற்போது ஸ்காட்லாந்து குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.