2016-06-29 17:05:00

2030ம் ஆண்டுக்குள் 75 கோடி குழந்தைகள் கட்டாயத் திருமணம்


ஜூன்,29,2016. மனித சமுதாயம் தற்போது சந்தித்துவரும் சீர்குலைவு, ஐந்து வயதுக்குட்பட்டக் குழந்தைகளில் 6 கோடியே 90 இலட்சத்திற்கும் அதிகமானோர், இறப்பதற்கும், 16 கோடியே 70 இலட்சம் சிறுவர், சிறுமியர் வறுமையில் வாழ்வதற்கும் காரணமாக அமையும் என்று, இச்செவ்வாயன்று வெளியான ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

இன்றைய உலகப் போக்கு தொடர்ந்தால், 2030ம் ஆண்டுக்குள் 75 கோடி பெண் குழந்தைகள், கட்டாயத் திருமணத்திற்கு உள்ளாக்கப்படுவர் என்று, இவ்வறிக்கையைச் சமர்ப்பித்த ஐ.நா. குழந்தைகள் நல நிதி அமைப்பான UNICEFன் தலைவர், அந்தனி லேக் (Anthony Lake) அவர்கள் கூறினார்.

குழந்தைகள் மீது நம் கவனமும், முழு முயற்சிகளும் விரைவில் திரும்பவில்லையெனில், வருங்காலத்தில் கடுமையான வறுமையும், பாகுபாடுகளும் நிறைந்த சமுதாயத்தை நாம் உருவாக்கிவிடுவோம் என்று ஐ.நா. உயர் அதிகாரி அந்தனி லேக் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

தெற்கு ஆசியாவிலும், ஆப்ரிக்காவின் சஹாரா பகுதிகளிலும் சிறுவர், சிறுமியரின் நிலை மிக மோசமாக மாறி வருகிறது என்றும், இந்நிலையை மாற்ற அவசரமான, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்தனி லேக் அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.