2016-06-29 15:28:00

அனைவரையும் ஒருங்கிணைக்கும் சிறந்த கருவி, விளையாட்டு


ஜூன்,29,2016. அனைவரையும் ஒருங்கிணைக்கும் திறந்த மனப்பான்மையை உருவாக்க, விளையாட்டு, சிறந்த கருவி என்பதை திருப்பீடம் வலியுறுத்துகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. அவையில் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் Ivan Jurkovič அவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 32வது அமர்வில் இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் கொள்கை வழியே அனைவரின் மனித உரிமைகளை உறுதி செய்தல் என்ற கருத்துடன் ஜெனீவாவில் நடைபெற்று வரும் கூட்டத்தில், பேராயர் Jurkovič அவர்கள், பிரேசில் நாட்டு ரியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் வழியே உலக சமுதாயம் ஒருங்கிணைந்து வருவது குறித்து பேசினார்.

எவ்வகையான பாகுபாடும் இன்றி, மனிதர்களின் உண்மையான முன்னேற்றத்தை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் ஒலிம்பிக் உறுதிமொழி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரைகளில் குறிப்பிட்டுள்ளதை, பேராயர் Jurkovič அவர்கள், இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

முன்பு எப்போதும் இல்லாத அளவு இவ்வுலகில் நட்பும், ஒத்துழைப்பும் தேவைப்படும் இன்றையச் சூழலில் நடைபெறவிருக்கும் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மனித குலத்தை ஒற்றுமையில் வளர்க்க ஒரு வாய்ப்பாக அமையவேண்டும் என்று பேராயர் Jurkovič அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

விளையாட்டுக்கள், வர்த்தக உலகின் கொடூரப் பிடியிலிருந்து விடுதலை பெற்று, நன்னெறி விழுமியங்களையும், மனித உரிமைகளையும் வளர்க்கும் கருவிகளாக மாற வேண்டும் என்ற விண்ணப்பத்தையும், பேராயர் Jurkovič அவர்கள் தன் உரையில் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.