2016-06-29 15:39:00

மனித சமுதாயத்தில் இனவெறிக்கு இடமில்லை - கர்தினால் நிக்கோல்ஸ்


ஜூன்,29,2016. மனிதப் பண்புடைய ஒரு சமுதாயத்தில் இனவெறியும், வேற்றினத்தவர் மீது வன்முறையும் வளர்க்கப்படக் கூடாது என்று, இங்கிலாந்து கர்தினால், வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

பிரித்தானிய அரசு, ஜுன் 23, கடந்த வியாழனன்று, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் தீர்மானத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் வாழும் வேற்று நாட்டவர் மீது காட்டப்பட்டு வரும் எதிர்ப்பு, வெறுப்பு ஆகியவற்றை இங்கிலாந்து ஆயர் பேரவை வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது.

ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அண்மையில் நிகழ்ந்த கருத்து வாக்கெடுப்பு, நம்மைப் பிரிக்கும் சக்தியாக மாறிவிடக் கூடாது என்று விண்ணப்பித்துள்ளார்.

Portsmouth மறைமாவட்டத்தின் ஆயர், பிலிப் ஈகன் அவர்கள், CNS கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில், போலந்து, இந்தியா, பிலிப்பீன்ஸ் நைஜீரியா நாடுகளை சேர்ந்தவர்கள் தன் மறைமாவட்டத்தில் வாழ்வதாகவும், அவர்கள் கிறிஸ்தவ குழுமங்களில் தலைசிறந்த பணிகள் ஆற்றிவருகின்றனர் என்றும் கூறினார்.

ஜுன் 23ம் தேதிக்கும் 27ம் தேதிக்கும் இடையே, இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வேற்று நாட்டவருக்கு எதிராக நிகழ்ந்துள்ள வெறுப்பு குற்றங்கள் 85 என்று, காவல்துறையினர் அறிவித்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்து ஆயர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.