2016-06-29 16:52:00

வேலிகள் அமைப்பதிலேயே ஐரோப்பிய அரசுகளின் கவனம்


ஜூன்,29,2016. ஜுன் 28, 29 ஆகிய இரு நாட்கள், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய அவைக் கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், துருக்கி நாட்டிற்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று, ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய அரசு விலகுவது என்ற முடிவைத் தொடர்ந்து, முதன்முறையாகக் கூடிய ஐரோப்பிய அவையின் கூட்டத்தில், துருக்கி நாட்டின் துன்பங்களை ஐரோப்பிய அவை மறந்துவிடக் கூடாது என்று ஐரோப்பிய காரித்தாஸ் வலியுறுத்தியுள்ளது.

மத்தியக் கிழக்குப் பகுதிகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் மக்களைத் தடுக்க, வேலிகள் அமைப்பதிலேயே அரசுகள் தங்கள் கவனத்தைச் செலுத்தாமல், அம்மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்று, ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர், ஆயர் Luc van Looy அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வாண்டு மார்ச் 18ம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துருக்கி நாட்டிற்கும் இடையே நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில், ஐரோப்பிய ஒன்றியம் விரைவாகச் செயல்பட வேண்டும் என்று ஆயர் Luc van Looy அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.