2016-07-01 15:59:00

சுற்றுலாத்துறை- 2025க்குள் 4.6 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு


ஜூலை,01,2016. இந்தியாவுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையே இடம்பெறும் சுற்றுலாவின் வாயிலாக, 2025ம் ஆண்டுக்குள் 4 கோடியே 60 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

'இந்தோ-அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (IACC)' சார்பில் புதுடெல்லியில் நடத்தப்பட்ட கருத்தரங்கில், இந்திய-அமெரிக்க சுற்றுலாத்துறையின் வாயிலாக, 500 பில்லியன் டாலர்களுக்கு வர்த்தக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டது.  

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 பில்லியன் டாலர்களை சுற்றுலாத்துறை கொண்டுள்ளது. 2015-ம் ஆண்டு வரை ஏறக்குறைய 3.7 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது என, உலக சுற்றுலா அமைப்பின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

குறிப்பாக, 1.2 கோடி அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கின்றனர். அதேபோல், 1 கோடி இந்திய சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்கும் சென்றிருக்கின்றனர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக ஒரே ஆண்டில் 1 கோடி 'நான்-இமிகிரெண்ட்' விசாக்களை வழங்கியிருக்கிறது இந்தியா எனவும் இக்கருத்தரங்கில் கூறப்பட்டது.

இன்றையச் சூழ்நிலையில், நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு துறையாக சுற்றுலாத்துறை மட்டுமே உள்ளது. இந்தியச் சுற்றுலாத்துறை வளர்ந்து வருகிறது. இந்தத் துறையில் சரியாக முதலீடுகளைக் கொண்டு வந்தால் இன்னும் வேகமாக வளரும். 2025-ம் ஆண்டிற்குள் 4.6 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அளவுக்கு இந்தத் துறைக்கு பல வாய்ப்புகள் உள்ளன என, இதில் கலந்து கொண்ட இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் Richard Verma அவர்கள், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.