2016-07-02 15:25:00

மூளைக் காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் புதிய தொழில்நுட்பம்


ஜூலை,02,2016. மூளைக் காயங்களுக்கு மருந்து மற்றும் நுண்துகள்களைச் செலுத்தும் நவீன தொழில்நுட்பம் ஒன்றை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Sanford Burnham Prebys Medical Discovery நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தொழில்நுட்பமானது, சீரான இரத்த ஓட்டம் இடம்பெறவும், மண்டை ஓட்டின் அழுத்தத்தைக் குறைக்கவும் என, மூளைக் காயங்களால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்வதற்குப் பயன்படக் கூடியது என அந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள் Erkki Ruoslahti, Aman Mann  ஆகிய இருவரும் கூறுகின்றனர்.

Cysteine, Alanine, Glutamine, Lysine ஆகிய நான்கு அமினோ அமிலங்களும், மருந்து மற்றும் நுண் துகள்களை மூளையின் காயப்பட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன என இவ்வாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை மூளைக் காயங்களை இனங்கண்டு செயல்படக்கூடியவை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பிட்ட மூலப்பொருள்களை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமினோ அமிலங்களுடன் இணைப்பதன் வழியாக, மூளைக்காயங்களை அறிந்து செயல்படும் கருவியாக அவைகளைப் பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வாய்வு மனிதர்களில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்து, கீழே விழுதல், தாக்குதல் போன்ற காரணங்களால், உலகில் ஒவ்வோர் ஆண்டும், ஏராளமானோர் மூளைக்காயங்களால் துன்புறுகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும், ஏறக்குறைய 25 இலட்சம் பேர் இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.