2016-07-08 14:05:00

இது இரக்கத்தின் காலம்...: தவறை உணரவைக்கும் சிறந்த வழி


ஜப்பானின் ஒரு பகுதியில் பங்கேய் என்ற குரு, ஒரு மடத்தில், தியானம் செய்யும் வழிமுறைகள் பற்றிய வகுப்புகளை நடத்தினார். அதனால் ஜப்பானின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் அந்த மடத்திற்கு வந்து தங்கினர். அப்போது அந்த மடத்தில் இருக்கும் சில பொருட்கள் திருட்டுப் போயின. ஒரு சமயம் மாணவர்கள் அனைவரும் தியானம் செய்ய கூடும்போது, பொருட்களை திருடிய மாணவன் பிடிபட்டான். பின் அவர்கள், பங்கேய்க்கு இந்த விடயத்தை தெரிவித்து, அந்த திருடனை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் பங்கேய் அதனை புறக்கணித்தார். மறுநாளும் அந்த திருடிய மாணவன், பொருட்களை திருடும்போது பிடிபட்டான். ஆனால், அப்போதும் பங்கேய் இந்த விடயத்தை புறக்கணித்தார். இதனால் கோபம் கொண்ட மாணவர்கள் குருவிடம் "அந்த திருடனை வெளியேற்றவில்லை என்றால் நாங்களனைவரும் வெளியேறுகிறோம்" என்று எழுதி, புகார் கொடுத்தனர். அந்த புகாரைப் படித்த பங்கேய் அவர்கள், அனைவரையும் அழைத்து "நீங்கள் எல்லோரும் புத்திசாலிகள், உங்களுக்கு எது சரி? எது தவறு? என்று நன்கு தெரியும். அதனால் நீங்கள் விரும்பினால் படிக்க வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால், இந்த ஏழை மாணவனை மட்டும் என்னால் அனுப்ப முடியாது. ஏனெனில், அவனுக்கு எது தவறு? எது சரி? என்று தெரியாது. ஆகவே, நானும் அவனை கை விட்டால், அவன் எங்கு போவான். ஆகையால், நீங்கள் அனைவரும் என்னை விட்டுப் பிரிந்தாலும், நான் அவனை என்னுடனே வைத்துக் கொள்வேன்" என்று கூறினார். இதை கேட்ட அந்த திருடிய மாணவனின் கண்கள் கலங்கின. திருடுவது தவறு என உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டான். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.