2016-07-09 13:20:00

பொதுக்காலம் - 15ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


சென்னையில், இளம்பெண் சுவாதி கொலையுண்ட கொடுமை, தற்போது ஒரு வழக்காக மாறிவிட்டது. இந்த வழக்கு, பல மாதங்கள், அல்லது ஆண்டுகள் நடக்கலாம். இந்தக் கொலையைச் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள இளையவர் இராம்குமார், குற்றவாளியா என்பதை, நீதி மன்றம் தீர்மானம் செய்யட்டும். ஆனால், இந்தக் கொலையில், நமக்கு ஏதேனும் பங்கு உள்ளதா என்பதைச் சிந்திக்க இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இளம்பெண் சுவாதியின் மரணத்திற்கு, அவரைத் தாக்கிய இளையவர் மட்டும் பொறுப்பா? அல்லது, இளம்பெண் வெட்டப்பட்ட நேரத்தில், அதைத் தடுக்கவோ, அல்லது, காயப்பட்டு கிடந்த அவருக்கு உதவவோ முடியாமல் நின்ற அத்தனை பேரும் பொறுப்பா? அல்லது, இளம் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு தரமுடியாமல் போன ஒட்டுமொத்த சமுதாயமும் பொறுப்பா? இளம்பெண் சுவாதியின் மரணம், பொதுவான ஓர் இடத்தில் நடந்துள்ளது என்பதால், இந்தக் கேள்விகளை எழுப்பி, விடை தேடுவது நமது கடமை.

பொதுவான இடத்தில் நிகழ்ந்த இந்தக் கொடுமை, ஒரு வழக்காக மாறிவிட்டதால், இனி, நீதித்துறை, காவல்துறை, ஊடகங்கள் அனைத்துமே, நம் கவனத்தை, குற்றம் சுமத்தப்பட்டவர் மீது மட்டுமே திருப்பிவிடும். ஆனால், இந்த ஞாயிறு, நாம் இறைவனின் நீதி மன்றத்தில் நிற்கும்போது, அவர் நம் கவனத்தை வேறு, சரியான திசைகள் நோக்கி திருப்புகிறார். இறைவனின் கவனம் நம் ஒவ்வொருவர் மீதும் திரும்புகிறது.

பொது இடத்தில் குற்றம் ஒன்று நடக்கும்போது, யார் மீது நம் கவனம் திரும்பவேண்டும் என்பதை, இந்த ஞாயிறு வழிபாட்டில் நாம் வாசித்த 'நல்ல சமாரியர் உவமை' தெளிவுபடுத்துகிறது. பொது இடம் ஒன்றில் நடைபெற்ற ஒரு நிகழ்வுடன் இயேசு இந்த உவமையைத் துவக்குகிறார். எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் சென்ற ஒருவர், வழியில், நிர்வாணமாக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இந்தக் கொடுமையைச் செய்தது, கள்வர்கள் என்று இயேசு உவமையின் துவக்கத்தில் தெளிவாகக் கூறுகிறார். ஆனால், அந்தக் கள்வர்கள் மீது நம் கவனத்தைத் திருப்பாமல், அடிபட்டவரைக் கண்டு விலகிச் சென்றவர்கள், உதவி செய்தவர் இவர்கள் மீது நம் கவனத்தைத் திருப்புகிறார், இயேசு.

இயேசு இவ்விதம் செய்வது, ஓர் உண்மையை நம் உள்ளங்களில் ஆழப் பதிக்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் மனிதர்கள் அடிபட்டு விழுவது, அடிக்கடி நிகழும் கொடுமை. அவ்வேளைகளில், அவர்கள், ஏன், எவ்வாறு, யாரால் அடிபட்டனர் என்று கண்டுபிடிப்பதில் நம் சக்தியையும், நேரத்தையும் வீணாக்குவதற்குப் பதில், அடிபட்டு கிடப்பவரை எவ்விதம் காப்பாற்ற முடியும் என்பதில் நம் கவனம் திரும்பவேண்டும் என்பதே, இயேசு இவ்வுவமையில் நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம்.

அடிபட்டவர் மீது அக்கறை காட்டுவது, கோர்ட், கேஸ் என்று, நம்மை இக்கட்டில் மாட்டிவிடும் என்ற அச்சமே, நம்மைத் தயங்கச் செய்கிறது. 'நல்ல சமாரியர்' உவமையில், அடிபட்டிருந்தவரைக் கண்டு, குருவும், லேவியரும் விலகிச் செல்வதற்கு, அவர்கள் உள்ளங்களில் ஆழ வேரூன்றியிருந்த சட்டங்களும், சம்பிரதாயங்களும் காரணம். சட்டங்களுக்கு முதலிடம் கொடுத்து, விலகிச் சென்ற குருவையும், லேவியரையும், இரக்கமற்றவர்கள் என்று நாம் முத்திரை குத்தும் வேளையில், நமக்கு நாமே என்ன முத்திரை குத்தப் போகிறோம்?

அடிபட்டுக் கிடந்த மனிதருக்கு, ஒரு குருவும், ஒரு லேவியரும் ஆற்ற மறந்த, அல்லது மறுத்த ஓர் உதவியை ஒரு சமாரியர் செய்தார். இயேசு, இம்மூவரையும் அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் மூவரும், அடிபட்டிருந்தவரை பார்த்த விதத்தில், சிறிய, ஆனால், அதே நேரம், முக்கியமான வேறுபாடுகளைக் கூறுகிறார். (லூக்கா 10 31,32,33)

குரு, போகிற போக்கில் அவரைக் கண்டார், விலகிச் சென்றார். லேவியரோ அவ்விடத்துக்கு வந்தார், கண்டார், பின்னர் விலகிச் சென்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அடுத்ததாக வந்த சமாரியரோ, அருகில் வந்தார், கண்டார், பரிவு கொண்டார். அம்மூவரின் விழிகளிலும் பதிந்த காட்சி ஒன்றுதான். ஆனால், செயல்களில் மாற்றத்தை உருவாக்கியது எது? கண்கள் அல்ல, இதயம். இதயத்தில் உருவான பரிவு, சமாரியரை, செயலில் ஈடுபட வைத்தது.

ஊனக் கண்களால் நாம் காண்பது ஒரே காட்சிதான் என்றாலும், உள்ளக் கண்களால் நாம் காண்பது என்ன என்பதைப் பொருத்து, வேறுபாடுகள் எழும். சாலையில் நடக்கும் விபத்து ஒன்றை எண்ணிப் பார்ப்போம். விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் மனிதரைச் சுற்றி கூடும் கூட்டத்தில், எத்தனை வகையான பார்வைகள்... காவல் துறையைச் சேர்ந்தவர் பார்க்கும் பார்வை, யார் மீது குற்றம் என்பதைப் பதிவுசெய்யும் பார்வை. பத்திரிகை நிருபரின் பார்வை, பல கோணங்களில் விபத்தைப் படம்பிடிக்கும் பார்வை. இரத்தத்தைக் கண்டு, மறுபக்கம் திரும்பிவிடும் பார்வைகளும் அக்கூட்டத்தில் இருக்கும்... இவ்வாறு, சுற்றி நிற்கும் கூட்டத்தில், விதவிதமான பார்வைகள்!

நம்மையும் அக்கூட்டத்தில் ஒருவராக இணைத்துப் பார்ப்போம். விபத்து நடந்த இடம், நாம் தங்கியிருக்கும் பகுதி என்றால், நமது பார்வை இன்னும் கூர்மை பெறும். அடிபட்டிருப்பவர், நமக்குத் தெரிந்தவராக, அல்லது, நமது உறவுகளில் ஒருவராக இருக்கலாம் என்ற பரிதவிப்பு, அடிபட்டிருப்பவரின் அருகில் நம்மை இழுத்துச் செல்லும்.

அவ்வேளையில், அப்பக்கம் வரும் ஒரு மனிதர், வேறு எந்த எண்ணமும் இல்லாமல், உடனே முதலுதவிகள் செய்ய முனைவதையும் நாம் காணலாம். விழிகளில் பதியும் காட்சி ஒன்றுதான் என்றாலும், அந்தக் காட்சி மனதில் உருவாக்கும் எண்ணங்களும், உணர்வுகளும், நம்மைச் செயலிழக்கச் செய்யும், அல்லது செயலுக்குத் தூண்டும்.

செயலாற்றத் தூண்டப்பட்ட சமாரியர், அடிபட்டிருந்தவருக்கு முதலுதவிகள் செய்தார். அவர் காயங்களில் திராட்சை மதுவும், எண்ணெயும் ஊற்றி, அக்காயங்களை அவர் கட்டினார் என்றும், தாம் பயணம் செய்துவந்த விலங்கின் மீது, அடிபட்டிருந்தவரை ஏற்றி, ஒரு சாவடிக்குக் கூட்டிச் சென்றார் என்றும் இயேசு விவரிக்கிறார். சமாரியர் ஆற்றியச் செயல்களையெல்லாம் ஒருங்கே திரட்டினால், சமாரியரைப் பற்றிய ஒரு தெளிவு பிறக்கிறது. எருசலேம் எரிகோ பாதையில் ஒரு வர்த்தகராக அவர் சென்றிருக்க வேண்டும் என்பதே அந்தத் தெளிவு. திராட்சை மதுவும், எண்ணெயும் விற்பதற்காகச் சென்றவர், அந்தச் சமாரியர். கணிசமான அளவு இவற்றை அவர் எடுத்துச் சென்றதால், ஒரு விலங்கும் உடன் சென்றது. மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை ஒன்று திரட்டினால், அவ்வழியாக வந்த சமாரியர், வசதி வாய்ந்தவர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

கள்வர் பயம் அதிகம் உள்ள அப்பகுதியில், தான், தனது பாதுகாப்பு, தனது பொருட்களின் பாதுகாப்பு ஆகியவற்றை மட்டும் சிந்தித்தவராக அச்சமாரியர் செயல்பட்டிருந்தால், அக்குருவையும், லேவியரையும் விட, அவர்தான் மிக அவசரமாக அப்பாதையைக் கடந்திருக்கவேண்டும். ஆனால், நடந்தது என்ன? அவர், தன்னையும், தன் வர்த்தகப் பொருட்களையும், விலங்கையும் ஆபத்துக்கு இலக்காக்குகிறார். தன்னை ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை மறந்து, செயலில் இறங்குகிறார். ஏனெனில், அவர் எண்ணங்களை, மனதை, சூழ்ந்ததேல்லாம் பரிவு ஒன்றே.

ஆஸ்திரேலிய கவிஞர் Henry Lawson என்பவர், நல்ல சமாரியர் உவமையை, ஒரு கவிதையாக வடித்துள்ளார். அக்கவிதையில், சமாரியரை, ஒரு முட்டாள் எனக் கூறுகிறார் அவர்:

அவர் ஒரு முட்டாள்.

அவர் நினைத்திருந்தால், செல்வம் குவித்திருக்கலாம்

ஆனால், தேவையில் உள்ள அடுத்தவரை

கடந்து செல்ல இயலாதவர் அவர்.

அவரைக் கண்ட மற்ற வர்த்தகர்கள்

அவர் மென்மையானவர் என்று கேலி செய்தனர்

வர்த்தக உலகில் இந்த சமாரியர்

அடிக்கடி கள்வர்களால் காயப்பட்டார்.

முதலுதவிகள் செய்ததும், தன் கடமை முடிந்ததென்று எண்ணாமல், தான் துவங்கிய உதவியை முழுமையாகத் தொடர்ந்தார் சமாரியர். தான் பயணம் செய்துவந்த விலங்கின் மீது அவரை ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுச் சென்றார்.

அடுத்தவருக்கு உதவி என்பதை பல வழிகளில் செய்யலாம். நமது தேவை போக, அதிகமாக, சேமிப்பில் இருக்கும் செல்வத்திலிருந்து பிறருக்கு உதவிகள் செய்யலாம்.  வழியில் நம்மிடம் கையேந்தும் மனிதர்களுக்கு நாம் அளிக்கும் தர்மம் இவ்வகையைச் சேரும். அல்லது, நமது தேவைகளைக் குறைத்துக்கொண்டு, அடுத்தவருக்கு உதவிகள் செய்யலாம். “உங்களுக்கு வலிக்கும்வரை வாரி வழங்குங்கள்” “Give till it hurts” என்பது அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் சொன்ன ஓர் அற்புத அறிவுரை. அதாவது, நமது சுகங்களைக் குறைத்துக்கொண்டு, நம்மை வருத்தும் வரை நாம் கொடுப்பதில்தான் பொருள் உள்ளது என்பது, அன்னையின் கருத்து.

குரு, லேவியர், சமாரியர் என்ற இந்த மூவரின் மனங்களில் ஓடிய எண்ணங்களைப் பற்றி Martin Luther King Jr. அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிடுகையில், ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார். அடிபட்டுக் கிடந்தவரைக் கண்ட குருவுக்கும் லேவியருக்கும் மனதில் எழுந்த கேள்வி இதுதான்: "இந்த மனிதருக்கு நான் உதவி செய்தால், எனக்கு என்ன ஆகும்?" இந்தக் கேள்வி, அவர்களை, அடிபட்டவரிடமிருந்து விலகிச்செல்ல வைத்தது. இதற்கு நேர்மாறாக, அடிபட்டவரைக் கண்டதும், சமாரியர்  மனதில் எழுந்த கேள்வி: "இந்த மனிதருக்கு நான் உதவி செய்யாவிட்டால், இவருக்கு என்ன ஆகும்?" இந்த வேறுபாடுதான், முதல் இருவருக்கும், இறுதியில் வந்த சமாரியருக்கும் இடையே இணைக்க முடியாத ஒரு பாதாளத்தை உருவாக்கியது. அந்தச் சமாரியர்தான் இயேசு சொல்லித்தர விரும்பும் ஒரே பாடம்.

என் அயலவர், அடுத்திருப்பவர் யார்? என்று இயேசுவிடம் கேட்ட திருச்சட்ட அறிஞர், தன் கேள்விகளுக்கு அறிவு சார்ந்த விடைகள் கிடைக்கும், எனவே தன் அறிவுத் திறமையையும் கூட்டத்திற்கு முன் நிரூபிக்கலாம் என்ற எண்ணத்துடன் இயேசுவிடம் கேள்விகளைத் தொடுத்தார். இயேசுவோ, அதனை ஒரு கேள்வி பதில் விவாதமாக மாற்றிவிடாமல், செயலுக்கு இட்டுச் செல்லும் அழைப்பாக மாற்றினார். உவமையின் இறுதியில், 'அயலவர் யார்?' என்ற கேள்விக்கு சரியான பதில் அளித்த திருச்சட்ட அறிஞரைப் பார்த்து, 'சரியாகச் சொன்னீர்' என்று பாராட்டிவிட்டு, இயேசு விலகவில்லை. மாறாக, அவ்வறிஞரைப் பார்த்து, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.

என் அயலவர், அடுத்திருப்பவர் யார்? என்பது வெறும் அறிவுசார்ந்த விவாதம் அல்ல, அது செயல்வடிவில் வெளிப்பட வேண்டிய ஈடுபாடு என்பதை இயேசுவின் இறுதி ஆலோசனை அழுத்தந்திருத்தமாய்ச் சொல்கிறது. இன்றும் இந்தக் கேள்விக்குப் பதில் தேடிவருகிறோம். இந்த பதில், நம்மைச் செயலுக்கு அழைக்கிறது என்பதை உணரும்போது, செயல்படத் தயங்கி, அதிலிருந்து விலகிக்கொள்ளும் நோக்கத்தோடு, நாம் வேறு கோணங்களில் கேள்விகள் எழுப்புகிறோம். எடுத்துக்காட்டாக, நல்ல சமாரியர் உவமையில் பாதையில் பயணம் மேற்கொண்ட அந்த மனிதர், அது ஆபத்தான பாதை என்பதை உணர்ந்து ஏன் தனியே பயணம் செய்தார்? அவருடைய பொறுப்பற்ற நடத்தையால், மற்றவர் மீது ஏன் பழி சுமத்தவேண்டும்? என்ற கேள்விகளை எழுப்பும் 'practical' மனிதர்களையும் காணலாம்.

இளம்பெண் சுவாதி கொலையுண்ட நிகழ்விலும், தேவையில் இருந்த இளம்பெண்ணுக்கு உதவிகள் செய்யாது, அவர் ஏன் அந்நேரத்தில் தனியாகப் பயணம் செய்தார்? அவருக்கும், அவரைத் தாக்கியவருக்கும் என்ன தொடர்பு? என்று கேள்விகளைத் தொடர்வதிலேயே குறியாய் இருக்கும் திருச்சட்ட அறிஞர்களாக நாம் மாறிவிடுகிறோம்.

இயேசு இந்த உவமையின் இறுதியில் சொன்ன வரிகள், நமது தோளை உலுக்கி, முகத்தில் தண்ணீர் தெளித்து... தேவைப்பட்டால், முகத்தில் அறைந்து, நம்மைத் தூக்கத்திலிருந்து, மயக்கத்திலிருந்து எழுப்பும் வரிகள்... "நீரும் போய் அப்படியே செய்யும்."

என்ன செய்ய வேண்டும்? அன்பு செய்ய வேண்டும்.

எப்படிச் செய்ய வேண்டும்? சமாரியர் செய்ததுபோல் செய்யவேண்டும். அதாவது,

"நீரும் போய் அப்படியே செய்யும்." நாமும் போய் அப்படியே செய்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.