2016-07-14 16:26:00

வெனிசுவேலாவில் மருந்து பற்றாக்குறை குறித்து ஆயர்கள் கவலை


ஜூலை,14,2016. வெனிசுவேலா நாட்டைச் சூழ்ந்துள்ள உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக் குறையும், இராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கைகளும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்று, அந்நாட்டு ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

வெனிசுவேலாவின் கராக்காஸ் (Caracas) நகரில் நடைபெற்ற ஆயர்கள் பேரவையின் 106வது கூட்டத்தின் இறுதியில், இச்செவ்வாயன்று ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கை, "நீதியைப் பின்பற்றுவோரிடம் ஆண்டவர் அன்புகொள்கிறார்" (நீதிமொழிகள் 15:9) என்ற தலைப்பில் வெளியானது என்று, பீதேஸ் (Fides)  செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

நாட்டின் இராணுவம், அங்குள்ள குரு மாணவர்கள் மீதும் வன்முறையைக் காட்டியுள்ளது என்று தங்கள் அறிக்கையில் கூறும் ஆயர்கள், குடியரசின் அடிப்படை விழுமியங்கள் தற்போது மீறப்படுகின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் மருந்து பற்றாக்குறையைத் தீர்ப்பது, கொலம்பியா, வெனிசுவேலா நாடுகளுக்கிடையே எல்லையைத் திறப்பது, அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருப்போரை விடுவிப்பது ஆகியவை, அரசு மேற்கொள்ளவேண்டிய அவசர நடவடிக்கைகள் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.