2016-07-16 14:48:00

இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் பன்மைத்தன்மைக்குப் பாராட்டு


ஜூலை,16,2016. இந்தியாவில், பன்மைத்தன்மையைக் கொண்டு செயல்பட்டுவரும் கத்தோலிக்கத் திருஅவையைப் பாராட்டியுள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் கர்தினால் திமோத்தி மைக்கிள் டோலன்.

கேரளாவுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் டோலன் அவர்கள், வன்முறை ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், ஒற்றுமை என்ற விழுமியத்தை திருஅவை கொண்டிருப்பது ஊக்கமூட்டுவதாய் உள்ளது என்று கூறினார்.

இறையடியார் மார் இவான்யோஸ் அவர்கள் மரணமடைந்ததன் 63ம் ஆண்டு நிறைவோடு தொடர்புடைய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட  கர்தினால் டோலன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஜாக்கபைட் கிறிஸ்தவ சபையிலிருந்து ஒரு குழுவினர், கத்தோலிக்கத் திருஅவையில் இணைவதற்கு உதவியவர் இறையடியார் மார் இவான்யோஸ்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளாவின் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறைத்  திருஅவையின், புனித மரியா தலைமைப் பேராலயத்தில் கர்தினால் டோலன் அவர்களுடன், அத்திருஅவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், பத்து ஆயர்கள், இன்னும் ஏராளமான குருக்களும் இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர்.    

இந்திய கத்தோலிக்கத் திருஅவையில் இலத்தீன், சீரோ-மலபார், சீரோ-மலங்கரா ஆகிய மூன்று வழிபாட்டுமுறைகள் உள்ளன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.