2016-07-16 15:27:00

கேரளாவில் கந்தமால் மறைசாட்சிகள் குறித்த ஆவணப்படம்


ஜூலை,16,2016. ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது தலத்திருஅவை.

அரசின் இந்நடவடிக்கை குறித்து ஒடிசா தலத்திருஅவை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள, கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இம்மாதம் 8ம் தேதி பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 வயது சிறுமி உட்பட 5 கிராமத்தவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

மேலும், 2008ம் ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்க்கெதிராக நடந்த வன்முறையில் உயிரிழந்த கிறிஸ்தவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்று, இஞ்ஞாயிறன்று திருச்சூரில் திரையிடப்படவுள்ளது.

“அழிவுகளிலிருந்து குரல்:நீதியைத் தேடி கந்தமால்” என்ற தலைப்பிலான     90 நிமிட ஆவணப்படத்தை, கே.பி.சாசி அவர்கள் இயக்கியுள்ளார். இது, இஞ்ஞாயிறு முதல், கேரளாவின் பல பகுதிகளில் திரையிடப்படவுள்ளது.

2008ம் ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் இந்துத் தீவிரவாதிகள் நடத்திய வன்முறையில், 350க்கும் மேலான ஆலயங்களும், 6,500க்கும் அதிகமான வீடுகளும் அழிக்கப்பட்டன. மேலும், 56 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்தனர். 93க்கும் மேலான கிறிஸ்தவர்கள் இறந்தனர் மற்றும் 40க்கும் மேலான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள்.

ஆதாரம் : India Today / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.