2016-07-19 15:50:00

காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு கிறிஸ்தவ சபைகள் கண்டனம்


ஜூலை, 19,2016. நீதிகேட்டு  போராட்டம் நடத்தியவர்களை ஜிம்பாப்வே காவல்துறை தாக்கியதற்கு தங்கள் வன்மையான கண்டனத்தை பதிவுசெய்து, அந்நாட்டு கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சபை போதகர் Evan Mawarire என்பவர் கைது செய்யப்பட்டது குறித்தும் கவலையை வெளியிட்டுள்ள கிறிஸ்தவ சபைகள், மக்களின் குறைகளுக்குச் செவிமடுக்கவில்லையெனில், அது நாட்டை முற்றிலுமாக சீர்குலைக்கும் நிலைக்கு இட்டுச்செல்லலாம் என அவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.

ஏழைகளின் குரலாகச் செயல்படும் கிறிஸ்தவத் தலைவர்களை கைது மற்றும் அச்சுறுத்தல் வழியாக ஒடுக்க முயலும் காவல்துறையின் செயல்பாடு குறித்தும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் ஜிம்பாப்வே கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.

அரசு அலுவலகங்களில் காணப்படும் பெருமளவான ஊழல், குற்றங்கள் தண்டிக்கப்படாமல் செல்லும் நிலை, வேலைவாய்ப்பின்மைகள், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத அரசின் நிலை, தொழில் நிறுவனங்களின் மூடல்கள் போன்றவற்றையும் குறிப்பிட்டுள்ள கிறிஸ்தவ சபைத் தலைவர்கள், ஜிம்பாப்வேயின் 92 வயது அரசுத்தலைவர் இராபர்ட் முகாபேயின் கொள்கைகளையும் குறை கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.