2016-07-20 15:27:00

36வது பொது பேரவையைக் குறித்து, இயேசு சபையின் உலகத் தலைவர்


ஜூலை,20,2016. இயேசு சபையில் நடைபெற்ற 31வது பொதுப் பேரவை துவங்கி, 35வது பொதுப் பேரவை முடிய, 2ம் வத்திக்கான் சங்கம் வெளியிட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளன என்று, இயேசு சபையின் உலகத் தலைவர், அருள்பணி அதால்­ஃபோ நிக்கோலஸ்  (Adolfo Nicolás) அவர்கள் கூறினார்.

இவ்வாண்டு அக்டோபர் 2ம் தேதி, உரோம் நகரில் துவங்கவிருக்கும் 36வது பொதுப் பேரவையைக் குறித்து, இயேசு சபையின் தொடர்புத் துறை தலைவர், அருள்பணி பாட்ரிக் முலேமி (Patrick Mulemi) அவர்களுக்கு வழங்கிய பேட்டியில் அருள்பணி நிக்கோலஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

தான் பணி ஓய்வு பெறுவதை ஏற்று, அடுத்த உலகத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது 36வது அவையின் முக்கியப் பணி என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி நிக்கோலஸ் அவர்கள், இந்தப் பேரவையின் முன்னேற்பாடுகள் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் துவங்கிவிட்டன என்பதையும் எடுத்துரைத்தார்.

36ம் பொதுப் பேரவையில் பங்கேற்போருக்கு திருத்தந்தை உரை வழங்குவாரா என்ற கேள்விக்கு, பதில் அளிக்கையில், அது, திருத்தந்தையின் விருப்பம் என்று கூறிய அருள்பணி நிக்கோலஸ் அவர்கள், பேரவையின் உறுப்பினர்களிடம் தன் உணர்வுகளையும், எதிர்பார்ப்புக்களையும் திருத்தந்தை வெளிப்படுத்துவார் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.