2016-07-20 14:27:00

இது இரக்கத்தின் காலம்... மௌனத்தில் ஒளிந்திருக்கும் உண்மை


ஒரு சீன அரசர், தன் மகனுக்குப் பட்டம் சூட்டுவதற்கு முன்னர், தன் மகனுக்கு அரசாளும் தகுதி இருக்கிறதா என அறிந்துகொள்வதற்காக ஒரு ஜென் குருவிடம் அனுப்பி வைத்தார். குரு இளவரசரிடம், “ நீ காட்டுக்குச் சென்று ஆறு மாதங்கள் கழித்து வா” என்றார். இளவரசர் காட்டில் பல இன்னல்களை அனுபவித்து ஆறு மாதங்கள் கழித்து வந்தார்.

குரு, “நீ காட்டில் என்னென்ன ஓசைகளைக் கேட்டாய்?” என்றார்.

இளவரசரோ, “குருவே, நான் காட்டில் சிங்கங்களின் கர்ஜனை, புலியின் உறுமல், நரியின் ஊளையிடும் சத்தங்களைக் கேட்டேன்” என்றார்.

குரு, “நீ மீண்டும் காட்டுக்குச் சென்று ஆறு மாதங்கள் கழித்து வா”எனக் கூறி அனுப்பினார். சலிப்படைந்த இளவரசர் இம்முறை, தன் காதுகளைக் கொண்டு, கூர்மையாகக் கேட்கத் தொடங்கினார். ஆறு மாதங்களுக்குப் பின் குருவின் முன் வந்து நின்றார். குரு அவரிடம் முன்புக் கேட்டக் கேள்வியையே கேட்டார். “குருவே இம்முறை பறவைகளின் ஒலிகளைக் கேட்டேன், பூச்சிகளின் சத்தங்களைக் கேட்டேன்”என்றார் இளவரசர். குரு மீண்டும் அவரைக் காட்டுக்கு அனுப்பினார். ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் இளவரசர் குருவின் முன் வந்து வணங்கி நின்றார். அவர் முகத்தில் அமைதியும் ஒளியும் குடிகொண்டிருந்தன. இளவரசரின் நிலையைக் கண்ட குரு, அரசரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார். இம்முறை குரு இளவரசரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இளவரசரே பேசத் தொடங்கினார், “குருவே, காட்டில் மொட்டுக்கள் அவிழும் ஓசையைக் கேட்டேன், பிற உயிர்கள் தங்கள் மனங்களில் பேசுவதையும் தெளிவாகக் கேட்டேன், அவற்றின் மௌனத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எண்ணங்களின் அதிர்வுகளையும் கேட்டேன்”என்றார். அங்கு வந்த அரசர், இளவரசர் பேசுவதையெல்லாம் ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டு இருந்தார்.

குரு அரசரைப் பார்த்து, “அரசே, இப்போது இளவரசர் நாட்டையாளும் முழுத் தகுதியைப் பெற்றுவிட்டார். வெறும் வெற்று ஆரவாரங்களில் உண்மை இல்லை என்பதையும், உண்மையானது மௌனத்துக்குள் ஒளிந்திருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டுவிட்டார்.” என்றார்.

மகிழ்ச்சியடைந்த அரசரும் இளவரசரும் குருவை வணங்கி விடைபெற்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.