2016-07-20 15:10:00

ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதை உணர்த்தவரும் இளையோர்


ஜூலை,20,2016. உலக இளையோர் நாளை உருவாக்கியவரும், போலந்து நாடு தன் விடுதலைப் பயணத்தை மேற்கொள்ளத் தூண்டுதலாக இருந்தவருமான புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் நினைவு, கிரக்கோவ் நகருக்கு நான் மேற்கொள்ளவிருக்கும் பயணத்திற்கு உந்து சக்தியாக அமையும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

ஜூலை 25ம் தேதி முதல் 31ம் தேதி முடிய போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் 31வது உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இளையோருக்கென திருத்தந்தை அனுப்பிய காணொளிச் செய்தியில், உலக இளையோர் அனைவரையும் சந்திக்க தான் காத்திருப்பதாகக் கூறினார்.

உலக இளையோர் நாளுக்கென தங்கள் செபங்களாலும், இன்னும் பல செயல்களாலும் ஏற்பாடுகளை செய்து வந்துள்ள போலந்து இளையோருக்கு தன் சிறப்பான நன்றியை, திருத்தந்தை இச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

"இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" (மத். 5:7) என்று இறைமகன் இயேசு கூறியுள்ள வார்த்தைகளின் முழுமையான அருளை, உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வருகை தரும் இளையோர் பெறுவதற்கு, தான் சிறப்பாக வேண்டி வருவதாக திருத்தந்தை கூறியுள்ளார்.

இரக்கத்தின் முகமாக விளங்கும் இயேசுவின் பெயரால் கூடிவரும் இளையோர், இவ்வுலகம் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதை உணர்த்த கூடிவருகின்றனர் என்ற எண்ணம், இளையோரைச் சந்திப்பதற்கு தனக்குள் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது என்று, இத்தாலிய மொழியில், திருத்தந்தை வழங்கியுள்ள காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

வரலாற்றில் பல சவால்களைச் சந்தித்துள்ள போலந்து மக்கள் வெளிப்படுத்திய கடவுள் நம்பிக்கை, இப்பயணத்தின் போது, தனக்கும் ஓர் உந்து சக்தியாக அமையும் என்ற நம்பிக்கையை இச்செய்தியின்  இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 27ம் தேதி முதல் 31ம் தேதி முடிய போலந்து நாட்டின் கிரக்கோவ் நகருக்குச் செல்வது, அவரது 15வது திருத்தூது பயணம் என்பதும், திருத்தந்தையாக பொறுப்பேற்ற பின்னர், அவர் கலந்துகொள்ளும் 2வது உலக இளையோர் நாள் இது என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.