2016-07-21 15:53:00

இலங்கையில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க ஊர்வலம்


ஜூலை,21,2016. இளையோர், குறிப்பாக, பள்ளிச் சிறார் நடுவே, போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, அனைத்து கத்தோலிக்க சமுதாயமும் வலிமையான குரல் எழுப்பவேண்டும் என்று, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து கத்தோலிக்க நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும், தங்கள் எதிர்ப்பை உணர்த்தவேண்டும் என்று, கர்தினால் இரஞ்சித் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, ஜூலை 30ம் தேதி, கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிரான ஓர் ஊர்வலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து கல்வி நிலையங்கள், மற்றும் 39 பங்குத் தளங்கள் அனைத்தும் இந்த போராட்டத்தில் ஈடுபட, கர்தினால் இரஞ்சித் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 2000 பேர் ஹெரோயின் போன்ற போதைப் பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகின்றனர் என்றும், இலங்கையில் தற்போது 2,45,000 பேர் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்றும் இலங்கை அரசின் போதைப்பொருள் கண்காணிப்பு துறை அறிவித்துள்ளது.

அண்மைய மாதங்களில், பள்ளிச் சிறார் இப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்ற செய்தி, அதிர்ச்சியை அளித்துள்ளது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.