2016-07-21 15:56:00

கோவில்களைக் காக்க மும்பை கத்தோலிக்கர் போராட்டம்


ஜூலை,21,2016. அண்மையில் வெளியிடப்பட்ட மும்பை பெருநகர முன்னேற்ற திட்ட வரைவில், கத்தோலிக்க கோவில்களும், அவற்றைச் சார்ந்த இடங்களும் தவறுதலாகக் குறிக்கப்பட்டுள்ளன, அல்லது விடப்பட்டுள்ளன என்று, மும்பை நகர கத்தோலிக்கர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

திட்ட வரைவில் குறிக்கப்படாத கோவில்கள் சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்டவை என்று கூறி, அவற்றை இடிப்பதற்கு நகர அரசு முயற்சிகள் மேற்கொள்ளக் கூடும் என்று, கத்தோலிக்கர்கள் கவலை தெரிவித்திருப்பதாக, UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததென கருதப்படும் மஹிம் கோவில், பெருநகர முன்னேற்ற திட்ட வரைவில் சரியாகக் குறிக்கப்படவில்லை என்று, இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ரீட்டா தாஸ் அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

525,000 கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ள மும்பை உயர் மறைமாவட்டம், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கத்தோலிக்கர்களைக் கொண்டது என்றும், இங்குள்ள கத்தோலிக்கர்களுக்கு பிரச்சனைகளைத் தரும் வகையில் பெரு நகர திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும், மும்பை கத்தோலிக்கத் தலைவர், டால்பி டிசூசா (Dolphy D'Souza) அவர்கள் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.