2016-07-22 15:15:00

இந்தியாவில், கடுமையான சிறார் தொழில் சட்டத்திற்கு வரவேற்பு


ஜூலை,22,2016. இந்தியாவில் சிறார் குழந்தை தொழில்முறைக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்தும் நோக்கக்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டச் சீர்திருத்தத்தை, திருஅவை அதிகாரிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

இச்சட்டச் சீர்திருத்தம் பற்றி UCA செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த, இந்திய ஆயர் பேரவையின் தொழில் பணிக்குழு செயலர் அருள்பணி ஜெய்சன் வடச்சேரி(Jaison Vadassery) அவர்கள், தொடர்புடைய அதிகாரிகள், இதைக் கண்டிப்பாய் அமல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

இம்மாதம் 19ம் தேதி இந்திய மேல் சபை அங்கீகரித்துள்ள இச்சட்டச் சீர்திருத்தத்தின்படி, 14 வயதுக்குட்பட்ட சிறார், குடும்பத் தொழில் தவிர, அனைத்துத் துறைகளிலும் வேலைக்கு அமர்த்தப்படுவது முழுவதுமாகத் தடை செய்யப்படுகிறது.

இந்த மசோதா, கீழ்சபையிலும் அங்கீகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட பின்னரே சட்டமாக அமலுக்கு வரும்.  

இச்சட்டம் அமலுக்கு வந்த பின்னர், இதை மீறுகிறவர்களுக்கு, ஈராண்டு வரைச் சிறைத் தண்டனை அல்லது ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்தியாவில், 5 வயதுக்கும், 14 வயதுக்கும் உட்பட்ட ஏறத்தாழ 43 இலட்சம் சிறார், முழுநேரத் தொழிலாளர்கள். இவர்களில்  பெரும்பாலானவர்கள், வேளாண்மைத் தொழில் செய்பவர்கள்.  

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.