2016-07-22 15:00:00

செயற்கைக்கோள் வடிவமைப்பில் கல்லூரி மாணவர்கள் சாதனை


ஜூலை,22,2016. விண்வெளி குப்பையைக் குறைக்க 'க்யூப்சாட்' என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து சென்னை எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

பல்வேறு நாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வை மேற்கொள்ள ஊக்கப்படுத்துவதுடன், செயற்கைக்கோளை உருவாக்குவதற்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் பெங்களூர் பிஇஎஸ் பல்கலைக்கழகம் சார்பில் ‘தி பிஎன்எம் செயற்கைக்கோள் வடிவமைப்புப் பயிற்சி' அளிக்கப்பட்டது.

இதில் சென்னை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த கே.திவ்யா, எம்.ஜனனி, எஸ்.காயத்திரி, எஸ்.எம்.அம்ருத் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் விண்வெளியில் குப்பைகளை குறைக்க '3யூ க்யூப்சாட்' என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தனர்.

இவர்களுக்கு செயற்கைக்கோள் உருவாக்கம், வடிவமைப்பு, செயல்பாடு குறித்து கற்றுத் தரப்பட்டது. அமெரிக்க டஸ்கிஜி பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் ஷரன் அசுந்தி, மாணவர்களுடன் இணைந்து செயற்கைக்கோள் வடிவமைப்பில் அவர்களின் எண்ணங்களையும், தொலைநோக்கையும் மேம்படுத்தினார்.

செயற்கைக்கோள்களுக்கு உள்ள முக்கிய சவால் விண்வெளி குப்பைகளாகும். எதிர்காலத்தில் இது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்பதால் இப்புதிய செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூல முன்மாதிரி விரைவில் இஸ்ரோவிடம் அளிக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.