2016-07-22 15:10:00

துருக்கியில் மனிதாபிமானம் மேலோங்க வலியுறுத்தல்


ஜூலை,22,2016. நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கிவரும் துருக்கி நாட்டில், சரியான தீர்வுகள் காணப்படுவதற்கு, மனிதாபிமான உணர்வுகள் மேலோங்கி நிற்க வேண்டும் என்று திருப்பீடச் செயலர் கூறியுள்ளார்.

துருக்கியில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதையொட்டி, அந்நாட்டில், அடுத்த மூன்று மாதங்களுக்கு அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக, புதிய சட்டங்களை உருவாக்கவும், பல்வேறு சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தவும் அல்லது அவற்றை நிறுத்தி வைக்கவும், அரசுக்கு சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்படுகின்றன.

மேலும், இந்த அவசரகாலநிலை, ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், துருக்கி அரசுத்தலைவரின் இந்த அறிவிப்பு, உலகின் நிலைமையை மேலும் பதட்டநிலைக்கு உள்ளாக்கியுள்ளது என்று கவலை தெரிவித்தார்.

துருக்கியில் இப்பிரச்சனைக்கு காணப்படும் சரியான தீர்வில், ஞானமும், மனிதாபிமானமும் முன்னிலைப்படுத்தப்படும் என்றும், இத்தீர்வு, அனைத்து மக்களுக்கும் பயன்படும் முறையில் அமையும் என்றும் தான் நம்புவதாகக் கூறினார் கர்தினால் பரோலின்.

துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர், இதுவரை, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.