2016-07-23 14:35:00

இது இரக்கத்தின் காலம் – இறைவா, ஐஸ் க்ரீம் வேண்டும்...


ஒரு தாய், தன் குழந்தைகளுடன் உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பிடும் முன் அவர்களது ஆறு வயது சிறுவன், தான் செபிக்க விரும்புவதாகச் சொன்னான். பின் கண்களை மூடி, செபத்தை ஆரம்பித்தான். "இறைவா, நீர் நல்லவர், உம்மால் எல்லாம் செய்யமுடியும். நீர் எங்களுக்குத் தரப்போகும் உணவுக்காக நன்றி. உணவுக்குப் பின் அம்மா வாங்கித் தரப்போகும் ஐஸ் க்ரீமுக்கு இன்னும் அதிக நன்றி... ஆமென்" என்று செபித்து முடித்தான். ஐஸ் க்ரீம் கிடைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில், அவன் இந்த செபத்தை கொஞ்சம் சப்தமாகவே சொன்னதால், அந்த உணவு விடுதியில் மற்ற மேசைகளில் அமர்ந்திருந்தவர்களும் சிறுவனின் செபத்தைக் கேட்டு சிரித்தனர்.

அடுத்த மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர், "ஹும்... இந்த காலத்துப் பிள்ளைங்களுக்கு, செபம் சொல்லக்கூடத் தெரியல. கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு ஒரு செபமா?" என்று உரத்தக் குரலில் சலித்துக்கொண்டார். இதைக் கேட்டதும், செபம் சொன்னக் சிறுவனின் முகம் வாடியது. "அம்மா, நான் சொன்ன செபம் தப்பாம்மா?" என்று கண்களில் நீர் மல்கக் கேட்டான். அம்மா அவனை அணைத்து, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என்று தேற்ற முயன்றார்.

மற்றொரு மேசையிலிருந்து இன்னொரு வயதானப் பெண்மணி அந்தக் குழந்தையிடம் வந்து, கண்களைச் சிமிட்டி, "நான் கேட்ட செபங்களிலேயே இதுதான் ரொம்ப நல்ல செபம்" என்றார். பின்னர், தன் குரலைத் தாழ்த்தி, அச்சிறுவனிடம், "பாவம், அந்தத் தாத்தா. அவர் கடவுளிடம் இதுவரை ஐஸ் க்ரீம் கேட்டதேயில்லை என்று நினைக்கிறேன். அப்பப்ப கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவது, மனசுக்கு ரொம்ப நல்லது" என்று சொல்லிச் சென்றார்.

சிறுவன் முகம் மலர்ந்தான். தன் உணவை முடித்தான். அவன் வேண்டிக் கொண்டதைப் போலவே, உணவு முடிந்ததும், அம்மா ஐஸ் க்ரீம் வாங்கித் தந்தார். சிறுவன் அந்த ஐஸ் க்ரீம் கிண்ணத்தை வாங்கியதும், தன் செபத்தைக் குறை கூறிய அந்தத் தாத்தா இருந்த மேசைக்கு எடுத்துச் சென்றான். பெரிய புன்முறுவலுடன், "தாத்தா, இது உங்களுக்கு. இதைச் சாப்பிட்டால், மனசுக்கு நல்லது" என்று சொல்லி, தாத்தாவுக்கு முன் ஐஸ் க்ரீமை வைத்துவிட்டுத் திரும்பிவந்தான். அங்கிருந்தவர்கள் எல்லாரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

எதைப்பற்றியும் செபிக்கலாம், கடவுளிடம் எதையும் கேட்கலாம் என்று சொல்லித் தருவதற்கு, குழந்தைகள் சிறந்த ஆசிரியர்கள். குழந்தைகளிடம் பாடங்கள் பயில, இரக்கத்தின் காலம் நமக்கு உதவட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.