2016-07-23 15:03:00

ஐம்பது நாடுகளில் அன்னை தெரேசா பற்றிய திரைப்பட விழா


ஜூலை,23,2016. அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், வருகிற செப்டம்பரில் புனிதராக அறிவிக்கப்படுவதை முன்னிட்டு, அன்னையின் வாழ்வு மற்றும் போதனைகளை மையப்படுத்திய திரைப்பட விழா ஒன்று, ஏறத்தாழ ஐம்பது நாடுகளில், நூறு இடங்களில் நடைபெறவிருக்கிறது.

இந்தியாவில் சமூகத்தொடர்புத்துறைக்கான, உலக கத்தோலிக்க கழகத்தால் ஏற்பாடு செய்யப்படும், அன்னை தெரேசா அனைத்துலக திரைப்பட விழா(MTIFF), வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி கொல்கத்தாவில் ஆரம்பமாகும். அதன்பின்னர், அடுத்த ஆறு மாதங்களுக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

நொபெல் அமைதி விருது பெற்ற, அன்னை தெரேசா அவர்கள் வாழ்வால் தூண்டப்பட்டு எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள் மற்றும் சிறந்த திரைப்படங்கள், கொல்கத்தாவில் மூன்று நாள்களுக்குத் திரையிடப்படும் என்று, அதன் இயக்குனர் சுனில் லூக்காஸ் அவர்கள் கூறினார்.

அதன்பின்னர், இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, உதய்ப்பூர், குவாஹாட்டி, பாட்னா, இந்தோர், ராஞ்சி மற்றும் கேரளாவின் நான்கு நகரங்களில் திரையிடப்படும் என்று மேலும் கூறினார், சுனில் லூக்காஸ்.

பிரிட்டன், மலேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மியன்மார், பங்களாதேஷ், இலங்கை, சீனா உட்பட 50 நாடுகளில் இவ்விழா நடைபெறும்.  

வருகிற செப்டம்பர் 4ம் தேதி வத்திக்கானில் அன்னை தெரேசா அவர்கள் புனிதராக அறிவிக்கப்படுவார்.

அன்னை தெரேசா அனைத்துலக திரைப்பட விழா, அன்னை அருளாளராக அறிவிக்கப்பட்டவுடன், முதலில் 2003லும், பின்னர், 2007 மற்றும் 2010ம் ஆண்டுகளிலும் இடம்பெற்றது.

ஆதாரம் : Business Standard / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.