2016-07-25 16:18:00

ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் வன்முறைத் தாக்குதல் பற்றி திருத்தந்தை


ஜூலை,25,2016. ஜெர்மனியின் பவேரியா பகுதியின் மியூனிக், மற்றும், ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வன்முறை தாக்குதல்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின், இத்தாக்குதல்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாக்குதல்களில் உயிரிழந்தோருக்காக செபிப்பதாகவும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் வாழ விண்ணப்பிப்பதாகவும் கூறினார்.

தீவிரவாதம் மற்றும் வன்முறைகளால் ஜெர்மனியிலும், ஆப்கானிஸ்தானிலும், அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளது குறித்து நம் மனங்கள் கவலையுறும்வேளை, நம் செபங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பதையும் முன்வைத்தார் திருத்தந்தை.

ஒவ்வொருவர் இதயங்களிலும் நன்மைத்தனத்தையும் சகோதரத்துவ உணர்வையும் இறைவன் தூண்டவேண்டும் என தான் செபிப்பதாகவும், எந்த அளவுக்கு அமைதியின் பாதை இருண்டதாக தெரிகிறதோ, அந்த அளவுக்கு நம் செபங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.