2016-07-25 16:25:00

மியூனிக் தாக்குதலில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்


ஜூலை,25,2016. ஜெர்மனியின் மியூனிக் நகரில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு, தனது செபத்தையும் ஆறுதலையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மியூனிக் மற்றும் ப்ரெய்சிங் உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் ரெயினார்டு மார்க்ஸ் (Reinhard Marx) அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், துன்புறும் மக்கள் அனைவருடன் திருத்தந்தை கொண்டிருக்கும் ஒருமைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தாக்குதலையொட்டி, பாதுகாப்புப் பணியில் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் தாராளப் பணிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பாரன்சிஸ்.

ஜூலை 23, கடந்த வெள்ளி மாலையில், மியூனிக் நகரிலுள்ள ஒலிம்பியா விற்பனை வளாகத்தில், 18 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில், குறைந்தது ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் மற்றும் ஏறத்தாழ முப்பது பேர் காயமடைந்துள்ளனர்.

ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெர்மன் நாட்டு Ali David Sonboly என்ற இளைஞர், இத்தாக்குதலை நடத்திய பின்னர், தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்தார்.  இவர், ஐ.எஸ். இஸ்லாமிய அரசோடு எவ்விதத் தொடர்பும் வைத்திருந்ததாகத் தெரியவில்லை என்றும், 2011ம் ஆண்டில், நார்வேயில் 77 பேரைக் கொன்ற Anders Behring Breivik என்பவரை, இவர் பின்பற்றியிருக்கலாம் என்றும் ஜெர்மன் காவல்துறை சந்தேகிக்கின்றது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Instagram@Franciscus என்ற செயலியிலும், “உலகில் பயங்கரவாதத்திற்குப் பலியாகும் எல்லாருக்காவும் செபிக்கின்றேன், தயவுகூர்ந்து பயங்கரவாதத்தை நடத்தாதீர்கள்; இந்தப் பாதை, வெளியேற முடியாத பாதை”என்று எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.