2016-07-27 15:46:00

இரக்கம் இன்றி, அமைதியில்லை - கர்தினால் Dziwisz பேட்டி


ஜூலை,27,2016. உலகின் பெரும்பான்மையான நாடுகள் போலந்து நாட்டில் இணைவது இதுவே முதல் முறை என்று கிரக்கோவ் பேராயர், கர்தினால் Stanislaw Dziwisz அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கிரக்கோவ் நகரில் துவங்கியுள்ள 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளையொட்டி, கர்தினால் Dziwisz அவர்கள் வழங்கிய பேட்டியில், 25 ஆண்டுகளுக்கு முன், போலந்து நாட்டின் Czestochowa நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.

இந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகளையொட்டி திருத்தந்தை புனித 2ம் ஜான்பால், மற்றும், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோரின் உருவப்படங்கள் நகரெங்கும் நிறைந்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், இவ்விரு திருத்தந்தையரும் இரக்கத்தின் திருத்தூதர்கள் என்றும், இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இவர்களின் உருவம் இளையோர் மனங்களில் பதிவது பொருத்தமே என்றும், கர்தினால் Dziwisz அவர்கள், இப்பேட்டியில்  குறிப்பிட்டார்.

இரக்கம் இல்லாமல், இவ்வுலகம் அமைதியை சுவைக்காது என்று புனித பவுஸ்தீனாவுக்கு (Faustina) இறைவன் வெளிப்படுத்திய செய்தியை, இளையோர் தங்கள் உள்ளங்களில் ஏந்தி, இந்த நாட்டைவிட்டுச் செல்லவேண்டும் என்று, கர்தினால் Dziwisz அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பின், கர்தினால்களும் ஆயர்களும் பெருமளவில் கூடும் நிகழ்ச்சி இதுவே என்று சுட்டிக்காட்டிய கர்தினால் Dziwisz அவர்கள், இந்நிகழ்வின் வழியே, திருஅவையும், உலகமும், மீண்டும் புத்துணர்வு பெறும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.