2016-07-27 15:34:00

உலக இளையோர் நாள் துவக்கத் திருப்பலியில் கர்தினால் மறையுரை


ஜூலை,27,2016. 2000 ஆண்டுகளுக்கு முன், எருசலேம் நகரில் தூய ஆவியாரின் வருகை நிகழ்ந்தபோது உலகின் பல நாடுகளிலிருந்து மக்கள் அங்கு கூடியிருந்ததைப் போல, இப்போது, கிரக்கோவ் நகரிலும் உலகின் பல நாடுகளிலிருந்து இளையோர் கூடி வந்துள்ளனர் என்று, கிரக்கோவ் பேராயர், கர்தினால் Stanislaw Dziwisz அவர்கள் கூறினார்.

ஜூலை 26, இச்செவ்வாயன்று, மாலை 5.30 மணிக்கு, கிரக்கோவ் நகரின் புலோனியா (Blonia) பூங்காவில், 31வது உலக இளையோர் நாள் நிகழ்வின் துவக்கத் திருப்பலியை தலைமையேற்று நடத்திய கர்தினால் Dziwisz அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

187 நாடுகளிலிருந்து கூடி வந்துள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான இளையோருக்கு இத்தாலிய மொழியில் மறையுரை வழங்கிய கர்தினால் Dziwisz அவர்கள், திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், உலகெங்கும் நற்செய்தியைப் பரப்புவதற்கு, கிரக்கோவ் நகரிலிருந்து புறப்பட்டார் என்பதை, தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

பல்வேறு கலாச்சாரம், மொழி என்ற பின்னணிகளைக் கொண்டுள்ள இளையோர், இன்று முதல், அன்பு, அமைதி, ஒன்றிணைதல் என்ற நற்செய்தி மொழியின் உதவியுடன், தொடர்புகளை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று கர்தினால் Dziwisz அவர்கள் கூறினார்.

ஜூலை 27, இப்புதன் முதல், வருகிற ஞாயிறு முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ளும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், 20 இலட்சம் இளையோர், 50 கர்தினால்கள், 800க்கும் அதிகமான ஆயர்கள், 20,000த்திற்கும் அதிகமான அருள் பணியாளர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.