2016-07-28 15:45:00

போலந்து ஆயர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு


ஜூலை,28,2016. Wavel மாளிகையில் ஏறத்தாழ 1 மணி, 15 நிமிடங்கள் நீடித்த வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மாலை 6.30 மணியளவில் போலந்து ஆயர்களை சந்திக்க, கிரக்கோவ் பேராலயம் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்தப் பேராலயத்தில், திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் மற்றும், போலந்து நாட்டின் முதல் புனிதர் Stanislas ஆகியோரின் புனிதப் பொருள்கள் போற்றி, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பேராலயத்தில் நுழைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில், இந்தப் புனிதப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ள பீடத்தின்முன் முழந்தாள்படியிட்டு செபித்தார். பின்னர், ஆயர்களுடன் கலந்துரையாடலைத் துவக்கினார். ஏறத்தாழ 130 ஆயர்கள் கூடியிருந்த இச்சந்திப்பில், வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஆயர்களுடன் மேற்கொண்ட இச்சந்திப்பில், திருத்தந்தை எவ்வித உரையும் வழங்கவில்லை; மாறாக, அவருக்கும், ஆயர்களுக்கும் இடையே, மனம் திறந்த கருத்துப் பரிமாற்றம் மட்டுமே இடம்பெற்றது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பை நிறைவு செய்து, அங்கிருந்து 3 கி.மீ. தூரத்திலிருந்த பேராயர் இல்லம் சென்றார், திருத்தந்தை. புனித 2ம் ஜான்பால், கிரக்கோவ் பேராயராக பணியாற்றியபோது இந்த இல்லத்தில் வாழ்ந்தார். அப்போது, அவர் மக்களைச் சந்திக்க அவ்வப்போது இவ்வில்லத்தின் மேல்மாடத்தைப் பயன்படுத்தினார். தன்னைச் சந்திக்க பேராயர் இல்லத்தின் முன் கூடியிருந்த மக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே மாடத்தில் நின்று, கையசைத்து வாழ்த்தியபின், பேராயர் இல்லத்தில், இரவு உணவு அருந்தி, உறங்கச் சென்றார். இத்துடன், போலந்து நாட்டின் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.