2016-07-29 16:23:00

Auschwitz மற்றும் Birkenau வதைமுகாம்களில் திருத்தந்தை


ஜூலை,29,2016. ஜூலை 29, வெள்ளி காலையில் உள்ளூர் நேரம் 7 மணிக்கு பேராயர் இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். இதில், போலந்து நாட்டில் பணியாற்றும் திருப்பீடத் தூதரும் கலந்துகொண்டார். திருப்பலிக்குப் பின், அவர் Oświęcim நகருக்கு ஹெலிகாப்டரில் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், வியாழன் போலவே, வெள்ளியன்றும் காலநிலை சீராக இல்லாததால், தன் பயணத்தை காரிலேயே மேற்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உள்ளூர் நேரம் 9.20 மணியளவில்,  Oświęcim நகரை வந்தடைந்த திருத்தந்தையை, Bielsko-Zywiec மறைமாவட்ட ஆயர், நகர மேயர் ஆகியோர் வரவேற்றனர். எவ்வித உரையும் இங்கு இடம்பெறவில்லை. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், வெள்ளியன்று காலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவித ஆழந்த அமைதியிலேயே நிகழ்ந்தன. ஏனெனில், இந்நாளின் காலை நிகழ்வுகள் அனைத்தும், Auschwitz நாத்சி வதை முகாமில் சித்ரவதைகள் அடைந்தோருக்கென அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.

Oświęcim நகரை அடைந்த திருத்தந்தை, 700 மீட்டர் தூரத்திலுள்ள Auschwitz அருங்காட்சியகம் நோக்கிச் சென்றார். பின்னர், அங்கிருந்து, Auschwitz வதை முகாமிற்குள் அவர் நடந்தே சென்றார். ஏற்கனவே, திருத்தந்தையர்கள், புனித 2ம் ஜான்பால், மற்றும் 16ம் பெனடிக்ட் ஆகியோர் இதே வாசல் வழியே நடந்து சென்று, இம்முகாமைப் பார்வையிட்டனர். முகாமில் சிறிது நேரம் அமைதியாக செபித்தார், திருத்தந்தை. போலந்து பிரதமர், Beata Szydło அவர்கள், திருத்தந்தையுடன் சேர்ந்துகொண்டார். மரணக் கட்டடம் என்றழைக்கப்படும் 11ம் எண் கட்டடத்தின் முன் சிறிது நேரம் நின்ற திருத்தந்தை, மரணச் சுவர் என்றழைக்கப்படும் சுவர் முன் நின்று அமைதியில் செபித்தார். பின்னர், Auschwitz அருங்காட்சியகத்திற்கு வழங்குவதற்கென தான் கொண்டு வந்திருந்த விளக்கு ஒன்றை, இந்த மரணச் சுவற்றில் ஏற்றிவைத்தார், திருத்தந்தை.

நாத்சி வதை முகாமில் சிறைப்பட்டிருந்த 12 பேரை இங்கு சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித மாக்சிமில்லியன் கோல்பே அவர்கள் அடைபட்டிருந்த சிறைக்குள் சென்று செபித்தார். 1941ம் ஆண்டு,  புனித கோல்பே அவர்கள், இதே ஜூலை 29ம் தேதி சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட மற்றொருவருக்குப் பதிலாக தன்னை கையளித்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. புனித கோல்பே இறந்த 75ம் ஆண்டு தற்போது சிறப்பிக்கப்படுகிறது.

Auschwitz வதை முகாமைப் பார்வையிட்டபின், அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள Birkenau வதை முகாமுக்குச் சென்றார், திருத்தந்தை. இங்கு, இரு நச்சு வாயுக் கொலைக்கூடங்களுக்கு இடையே உள்ள நினைவுச் சின்னத்தின் முன் நின்று செபித்தத் திருத்தந்தை, அங்கு ஒரு மெழுகு திரியையும் ஏற்றிவைத்தார். அவ்வேளையில், போலந்தின் தலைமை யூத குரு, Michael Schudrich அவர்கள், "ஆண்டவரே, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்" என்ற, 130ம்  திருப்பாடலின் முதல் வரியை எபிரேய மொழியில் துவங்கிவைக்க, நாத்சி வதை முகாமில் துன்புற்றோரைக் காப்பாற்ற உதவிய ஒருவர், இத்திருப்பாடலின் மீதி வரிகளை வாசித்தார். இந்த வழிபாட்டில் ஏறத்தாழ 1000 பேர் கலந்துகொண்டனர். நாத்சி வதை முகாம்களில் துன்புற்றோரும், அவர்களுக்கு உதவியவர்களும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

வதை முகாம்களை பார்வையிட்டதே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வெள்ளி காலை நடைபெற்ற ஒரே நிகழ்வாக அமைந்தது. ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட Auschwitz வதை முகாமில் மட்டும் 11 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானோர் யூதர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.