2016-07-29 16:38:00

உலக இளையோருக்கு திருத்தந்தை வழங்கிய முதல் உரை


ஜூலை,29,2016. அன்புக்குரிய இளைய நண்பர்களே, மாலை வணக்கம்! உங்களுடன் பயணித்து வந்துள்ள அனைத்து ஆயர்கள், அருள் பணியாளர்கள், துறவியர், குரு மாணவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இங்கு நமது நம்பிக்கையைக் கொண்டாட, அவர்கள் அனைவரும் கூடுதலாக முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். உலக இளையோர் நாளை உருவாக்கி, அதற்கு ஊக்கமளித்து வந்த புனித 2ம் ஜான்பால் அவர்களுக்கு, அவர் பிறந்த நாட்டில் சிறப்பான முறையில் நன்றி சொல்ல ஆசிக்கிறேன். பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அவர் வானிலிருந்து கண்ணோக்குகிறார்.

இயேசு நம்மை இந்த 31வது உலக இளையோர் நாளுக்கு அழைத்து வந்துள்ளார். "இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" (மத்தேயு 5:7) என்று இயேசு நம்மிடம் சொல்கிறார். மன்னிக்க முடிந்தவர்கள், கனிவு கொண்டவர்கள், தங்களின் மிகச் சிறந்ததை மற்றவர்களுக்கு தருபவர்கள், உண்மையிலேயே பேறுபெற்றோர்.

போலந்து நாடு, விழாக்கோலம் கொண்டுள்ளது. இங்கு கூடியிருக்கும் நாம் அனைவரும், இன்னும், ஊடகங்கள் வழியே நம்முடன் பங்கேற்கும் அனைத்து இளையோரும், இந்த யூபிலி ஆண்டின் உட்பொருளை உலகிற்குச் சொல்லப் போகிறோம்.

நான் ஆயராக இருந்தபோது கற்றுக்கொண்ட பல பாடங்களில் ஒன்றை நினைவுகூருகிறேன். ஆர்வத்துடன், அர்ப்பண உணர்வுடன், குறையாத சக்தியுடன் இளையோர் வாழ்வதைக் காண்பது எவ்வளவு அழகு என்பதை நான் கற்றுக்கொண்டேன். இயேசு ஓர் இளையவரின் உள்ளத்தைத் தொடும்போது,  அவர் உண்மையிலேயே மகத்தானச் செயல்களைச் செய்வதற்கு சக்தி பெறுகிறார். உங்கள் பகிர்வுகளில், கேள்விகளில் ஓய்வற்ற மனநிலையை காண முடிகிறது. இந்த ஓய்வற்ற மனநிலையை, ஒருவகையில், கொடை என்றே சொல்லவேண்டும்.

இறைவனின் இரக்கம் எப்போதும் இளமையுடன் கூடிய முகமாக இருக்கிறது என்பதை, திருஅவை, இன்று, உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள விழைகிறது. இரக்கத்திற்கு எப்போதுமே இளமையான முகம் உண்டு என்பதை, நான் கூற விழைகிறேன்.

இரக்கம் நிறைந்த இதயம், தன்னைவிட்டு வெளியேறி, அடுத்தவரைச் சந்திக்கச் செல்கிறது. அந்த இதயம், தன் இல்லத்தை இழந்தோருக்கு தஞ்சமளிக்கும் இதயம். தன் உணவைப் பகிர்ந்தளித்து, புலம் பெயர்ந்தோரை வரவேற்பது, இந்த இதயம். உங்களோடு சேர்ந்து 'இரக்கம்' என்ற வார்த்தையைச் சொல்லும்போது, வாய்ப்பு, எதிர்காலம், அர்ப்பணம், நம்பகத்தன்மை, விருந்தோம்பல், கனிவு, கனவு என்ற அனைத்து அம்சங்களையும் நினைத்துப் பார்க்க முடிகிறது.

நான் கற்றுக்கொண்ட மற்றொரு விடயத்தையும் உங்களிடம் கூற விழைகிறேன். வாழ்வில் விரைவாக 'ஓய்வெடுக்க' தீர்மானிக்கும் இளையோரைச் சந்திக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. விளையாட்டைத் துவக்குவதற்கு முன்னரே, தோல்வியை ஏற்றுக்கொள்வோரைக் கண்டு நான் கவலைப்படுகிறேன். இவர்கள் தங்கள் வாழ்வில் பரபரப்பை விரும்பி, தவறான, இருளான பாதைகளைத் தேடிச் செல்கின்றனர். மாயைகளை விற்பனை செய்பவர்கள் பின்னே இவ்விளையோர் செல்வது வேதனையைத் தருகிறது. இவர்கள் உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த நாட்களான இளமையை உங்களிடமிருந்து திருடி விடுகின்றனர்.

இளமையைத் திருடப்படாமல் காக்க, ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கே நாம் இங்கு கூடியுள்ளோம். எனவே, நான் உங்களைக் கேட்கிறேன்: வெறுமையான பரபரப்பை தேடுகிறோமா? அல்லது, நீண்ட காலம் நிறைவைத் தரும் நன்மைகளைத் தேடுகிறோமா? அத்தகைய நிறைவைத் தருவது, எந்த ஒரு பொருளும் அல்ல, அவர், ஒரு மனிதர். அவர் பெயர், இயேசு கிறிஸ்து. குறையுள்ளவற்றில் நாம் திருப்தி அடையாமல், நிறைவை நோக்கி நம்மை நடத்திச் செல்வது, இயேசு மட்டுமே. உன்னதக் கனவுகள் காண நம்மை என்றும் தூண்டிவிடுவது, அவரே.

மார்த்தா, மரியா ஆகியோரின் இல்லத்தில் தங்கச் சென்ற இயேசுவைப் பற்றி இன்றைய நற்செய்தியில் கேட்டோம். இவ்விருவரில், மார்த்தா, வேலைகளில் மூழ்கிப் போனார். நாமும் மார்த்தாவைப் போல் எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையை வாழலாம். அல்லது, மரியாவைப்போல், அமைதியாய் அமர்ந்து, நம்மைச் சுற்றியுள்ள உலகை இரசிக்கலாம்.

இயேசு நம் உள்ளம் என்ற இல்லத்திற்குள் வந்து நம்மோடு நேரம் செலவிட ஆசிக்கிறார். இங்கு நாம் கூடியுள்ள இந்நாட்களில் அவரை வரவேற்று, அவருக்குச் செவிமடுக்க இறைவன் நமக்கு உதவட்டும். நம் வாழ்வு நிறைவுள்ளதாய், மகிழ்வாய் இருக்க, அது, இரக்கம் நிறைந்த வாழ்வாக இருக்கவேண்டும். 

நாம் ஒன்றிணைந்து இறைவனிடம் வேண்டுவோம்: இறைவா, சவால்கள் நிறைந்த இரக்கத்தின் பயணத்தை நாங்கள் துவங்கச் செய்யும். உலகெங்கும் கட்டப்பட்டுள்ள சுவர்களைத் தகர்த்து, பாலங்களைக் கட்ட எங்களைத் தூண்டியருளும். உமது காலடியில் அமர்ந்து செவிமடுத்த மரியாவைப் போல, பிறருக்கு செவிமடுக்க, எங்களுக்கு உதவியருளும். எங்களால் புரிந்துகொள்ள முடியாதவர்கள், எங்களை அச்சுறுத்துபவர்கள் ஆகியோருக்கு தகுதியான முறையில் செவிமடுக்க சொல்லித்தாரும். வயதான எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற அன்னை மரியாவைப் போல, நாங்களும், வயது முதிர்ந்தவர்கள் மீது கவனம் காட்டி, அவர்களிடமிருந்து வாழ்வின் உண்மைகளைக் கற்றுக்கொள்ளச் செய்தருளும்.

இறைவா, உமது இரக்கம் நிறைந்த அன்பைப் பகிர்ந்தளிக்க எங்களை அனுப்பியருளும். இந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் உம்மை எங்கள் நடுவில் வரவேற்கிறோம். இரக்கத்தால் உருவாக்கப்படும் வாழ்வை மேற்கொண்டு, நாங்கள் நிறைவை அடையச் செய்தருளும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.