2016-07-29 16:29:00

கியூபா நாட்டு இளையோருக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி


ஜூலை,29,2016. கியூபா நாட்டைச் சேர்ந்த 1400க்கும் அதிகமான இளையோர், அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் கூடியுள்ளனர். கிரக்கோவில் நடைபெற்றுவரும் 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, போதிய வசதியில்லாத காரணத்தால், இவ்விளையோர், அதே நாட்களில் தங்கள் நாட்டில் ஓர் இளையோர் கூட்டத்தை நடத்துகின்றனர். உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் நடைபெறுவதைப் போலவே, இக்கூட்டத்திலும், மறைக்கல்வி உரைகள், சிலுவைப் பாதை, புனிதக் கதவில் நுழைதல், திருப்பலி ஆகிய நிகழ்வுகளை இவ்விளையோர் திட்டமிட்டுள்ளனர். ஹவானா கூட்டத்தில் கலந்துகொள்ளும் இளையோருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பானிய மொழியில் காணொளிச் செய்தியொன்றை இவ்வெள்ளியன்று அனுப்பியுள்ளார். இக்காணொளிச் செய்தியில், திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களுக்கு இப்போது செவி மடுப்போம்:

ஹவானாவில் கூடியுள்ள இளைய நண்பர்களே, நீங்கள் மேற்கொண்டுள்ள இக்கூட்டத்தில், ஒருவரையொருவர் சந்திப்பது, மதிப்பது, மன்னிப்பது, புரிந்துகொள்வது என்ற அழகிய பண்புகள் கொண்ட கலாச்சாரத்தை நீங்கள் வளர்ப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வாழ்வு, வெறும் கனவுகளால் கட்டியெழுப்பப்படாமல், உலகில் நிலவும் எதார்த்தமான உண்மைகள் மீது கட்டியெழுப்பப்படவேண்டும்.

நீங்கள் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை மேற்கொள்ளும்போது, உங்கள் அயலவர் மீது அன்புகொள்ளாமல், ஆண்டவன் மீது அன்பு கொள்வது இயலாததென்பதை நீங்கள் உணரவேண்டும். இறைவன் நம்மீது கொள்ளும் அன்பு, நம் குறைகள், பாவங்கள், துன்பங்கள் அனைத்தையும் துளைத்துச் சென்று, நமக்கு நம்பிக்கை தரும் அன்பு.

நீங்கள் புனிதக் கதவுகள் வழியே நுழையும்போது, இறைவனின் இத்தகைய அன்பு, உங்களை ஆட்கொள்ள அனுமதியுங்கள். நீங்கள் திரு நற்கருணை ஆராதனையில் ஈடுபடும் வேளையில், நானும் உங்களோடு இணைந்து செபிப்பேன்.

இக்கூட்டத்தை முடித்து, நீங்கள் செல்லும்போது, இரக்கத்தின் தூதர்களாக செல்லுங்கள். "அஞ்சாதீர்கள்" என்பதே, ஆண்டவன் நமக்குத் தரும் அற்புதமான உறுதிமொழி. எனவே, நீங்கள் அஞ்சாமல் இவ்வுலகிற்குச் சென்று, உலகை உயிர்பெறச் செய்யுங்கள். உயிர்த்த இயேசு உங்களோடு துண வருவார்.

கியூபாவின் இளையோரே, உன்னதமான உண்மைகளுக்கு உங்கள் உள்ளங்களைத் திறந்துவையுங்கள். கியூபா, ஒவ்வொரு நாளும் சிறந்து விளங்கும் என்பதை நம்புங்கள்.

மனிதர்கள் ஒருவர் ஒருவருடன் கைகுலுக்கியபோது, மனித வரலாற்றில் முதல் பாலங்கள் கட்டப்பட்டன. நீங்கள், தாராள மனதோடு, விரிந்த கரங்களோடு பாலங்களைக் கட்டச் செல்லுங்கள். இளையோர் அனைவரும் பாலம் கட்டும் பணியில் இணைந்து வரட்டும்!

உங்கள் உலகப் பயணத்தில் அன்னை மரியா உங்களுடன் துணை வருகிறார். "அவர் உங்களுக்குத் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்று கானாவில் கூறிய அன்னை மரியா, உங்களுக்கும் அதே வார்த்தைகளைக் கூறுகிறார். கியூபா மக்கள் அனைவருக்கும் என் செபங்களும், ஆசீரும். எனக்காக செபிக்க மறவாதீர்கள்! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.