2016-07-29 15:08:00

போன்யே (Błonia) பூங்காவிற்கு டிராமில் சென்ற திருத்தந்தை


ஜூலை,29,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போலந்து நாட்டில் மேற்கொண்டுள்ள திருத்தூதுப்பயணத்தின் இரண்டாவது நாளாகிய, ஜூலை 28, வியாழனன்று, செஸ்டகோவா நகர் யஸ்ன கோரா மரியன்னை திருத்தலத்திற்குச் சென்று, கறுப்பு அன்னை மரியா திருஉருவத்திற்கு தங்க ரோஜா ஒன்றை பரிசளித்து, அமைதியாக செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். ஏற்கனவே திருத்தந்தையர்கள் புனித இரண்டாம் ஜான்பாலும், 16ம் பெனடிக்ட் அவர்களும் இம்மரியன்னை திருஉருவத்திற்கு, தங்க ரோஜாக்களை காணிக்கையாக அளித்துள்ளனர். அன்னையின் திரு உருவத்தின் கீழே அலங்காரமாக வைக்கப்பட்டுள்ள அந்த இரு ரோஜாக்களுடன், இந்த ரோஜாவும் வைக்கப்படும் என யஸ்ன கோரா திருத்தல துறவு சபையினர் அறிவித்தனர்.   

யஸ்ன கோரா மரியன்னை ஏன் கறுப்பு மாதா என அழைக்கப்படுகின்றார் என்ற கேள்வி பலருக்கு எழலாம். காரணம் மிக எளியதுதான். யஸ்ன கோரா திருத்தலத்தில் உள்ள இந்த அன்னை மரியா ஓவியம், 14ம் நூற்றாண்டிலிருந்து மெழுகுவர்த்தி கொளுத்தி, விசுவாசிகளால் வணங்கப்பட்டு வருகிறது. இந்த மெழுகுவர்த்திகளின் புகையால், அன்னைமரி திரு உருவம், காலப்போக்கில் கருப்பு நிறமாகி, அதனாலேயே 'கறுப்பு மாதா' எனப் பெயர் பெற்றது என்பர்.

புகழ்பெற்ற இத்திருத்தலத்தில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்கு திருப்பலி நிறைவேற்றியபின், ஹெலிகாப்டரில் கிரக்கோவ் நகர் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரக்கோவ் பேராயர் இல்லத்தில் மதிய உணவருந்தி, சிறிது நேரம் ஓய்வெடுத்தபின், மீண்டும் உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, தன் திருப்பயண திட்டங்களைத் துவக்கினார். மாலை ஐந்து மணிக்கு திருத்தந்தையைச் சந்திக்க பேராயர் இல்லம் வந்திருந்த கிரக்கோவ் நகர் மேயர் Jacek Majchrowski அவர்கள், திருந்தைக்கு அந்நகரின் திறவுகோலை ஓர் அடையாளமாக வழங்கினார். திருத்தந்தை அந்நகரில் இருக்கும்வரை, அந்நகரின் நிர்வாகம் திருத்தந்தையின் கரங்களில் இருக்கும் என்பதைக் குறிக்கும் அடையாளம் இது. இந்த அடையாளச்சடங்கு முடிந்தபின், உலக இளையோரைச் சந்திக்க போன்யே (Błonia) பூங்காவிற்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை அதிகாரிகள் எளிமையின் எடுத்துக்காட்டுக்களாக இருக்கவேண்டும் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வரும் நம் திருத்தந்தை, தான் அர்ஜென்டினா தலைநகர் பேராயராக இருந்தபோது, இரயிலும், நிலத்தடி மெட்ரோவிலும்தான் பயணம் செய்தார் என்பது நாம் அறிந்ததே. ஒரு கர்தினாலாக அவர் காட்டிய எளிமையே இன்றும் தொடர்கிறது. பேராயர் இல்லத்திலிருந்து, போன்யே பூங்காவிற்கு, திருத்தந்தை சென்ற பயணத்தின்போதும், 15 இளைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுடன் டிராம் வண்டியில் பயணம் செய்தார். இப்பயணத்தில், திருத்தந்தை மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன், கிரக்கோவ் கர்தினால் Stanisław Dziwisz, நகர மேயர் Majchrowski ஆகியோரும் உடன்சென்றனர்.

டிராமில் தன்னுடன் பயணம் செய்த ஒவ்வொருவரையும் சந்தித்து, கைகுலுக்கி, வாழ்த்தினார் திருத்தந்தை. 300 பேரை ஏற்றிச்செல்லும் வசதியுடைய அந்த ட்ராமில், 15 மாற்றுத்தினாளிகளும் அவர்களைப் பராமரிப்பவர்களுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிராம் வண்டி ஓட்டுனர்களுக்கு செபமாலைகளை பரிசாக வழங்கினார். அவர்களும், திருத்தந்தையின் திருப்பயண நினைவாக அச்சிடப்பட்ட பயணச்சீட்டை நினைவுப்பரிசாக வழங்கியபோது, அதனை, அன்போடு பெற்றுக்கொண்டார் திருத்தந்தை. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயணம் செய்த இந்த டிராம் வண்டி, அவர் பெயரால் கிரக்கோவ் நகரில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் என்று கிரக்கோவ் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

திருத்தந்தையின் இந்த டிராம் பயணம், எளிமையை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தது என, பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.