2016-07-30 10:54:00

இளையோர் சிலுவைப்பாதையின் இறுதியில் திருத்தந்தையின் உரை


ஜூலை,30,2016. "நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" (மத். 25: 35-36)

நம் மனதில் அடிக்கடி எழும் "கடவுள் எங்கே?" என்ற கேள்விக்கு, இயேசு கூறும் இச்சொற்கள் விடை தருகின்றன. இவ்வுலகில் தீமை நிலவும்போது, இவ்வுலகில், உணவின்றி, தங்க இடமின்றி, மக்கள் இருக்கும்போது, புலம்பெயர்ந்தோரும், நாடுகளைவிட்டுத் துரத்தப்பட்டோரும் இருக்கும்போது, கடவுள் எங்கே? போர், மற்றும் வன்முறைகளால் குற்றமற்ற மக்கள் இறக்கும்போது, கடவுள் எங்கே? கொடுமையான நோய்கள், உறவுகளைப்  பிரிக்கும்போது கடவுள் எங்கே? சந்தேகத்தாலும், துன்பங்களாலும் உள்ளம் சிதைந்துபோகும்போது, கடவுள் எங்கே?

இக்கேள்விகளுக்கு மனித அளவில் விடைகள் கிடைக்காது. இயேசுவிடம் நம் பார்வை திரும்பவேண்டும். அப்போது இயேசு கூறும் பதில், "கடவுள் அவர்களில் இருக்கிறார்". இயேசு அவர்களில் இருக்கிறார், அவர்கள் வழியே, அவர்களோடு அவரும் துன்புறுகிறார். இயேசு அவர்களுடன் 'ஒரே உடல்' போல தன்னையே இணைத்துக் கொண்டுள்ளார்.

கல்வாரிவரைச் செல்லும் துயரத்தின் வழியில் துன்புறும் மக்களுடன் தன்னையே ஒன்றுபடுத்தி, அவர்களோடு நடக்க சம்மதிக்கிறார். சிலுவையில் இறந்ததால், தன் மீது, மனித சமுதாயத்தின் அனைத்து காயங்களையும் அவர் ஏற்றுக்கொண்டார். சிலுவையை விரும்பித் தழுவியதால், இயேசு, உலகில் உள்ள பசி, தாகம், தனிமை, துன்பம், மரணம் என்ற அனைத்தையும் அரவணைத்துக் கொண்டார். இன்று இரவு இயேசுவோடு இணைந்து, துன்புறுவோர் அனைவரையும், குறிப்பாக, சிரியாவின் போரினால் சிதறி ஓடும் சகோதர, சகோதரிகளை நாம் அரவணைப்போம்.

இயேசுவின் சிலுவைப் பாதையைத் தொடர்ந்ததால், பதினான்கு இரக்கச் செயல்களின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்கிறோம். இரக்கம் இல்லையேல், நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. முதலில் நாம் உடல் சார்ந்த ஏழு இரக்கச் செயல்கள் பற்றி சிந்திப்போம். பசித்தோருக்கு உணவளித்தல், தாகமுற்றோருக்கு பானம் தருதல், ஆடையற்றவரை உடுத்துதல், வீடற்றோருக்கு தஞ்சம் அளித்தல், நோயுற்றோரையும், சிறையிலும் இருப்போரையும் சந்தித்தல், இறந்தோரை அடக்கம் செய்தல். வாழ்வின் கொடைகளை நாம் இலவசமாகப் பெற்றுக்கொண்டோம், இலவசமாக வழங்குவோம். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோருக்கு பணியாற்றுவது, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவுக்குப் பணியாற்றுவதற்கு ஒப்பாகும்.

அங்கு நாம் கடவுளைக் காண்கிறோம், கடவுளைத் தொடுகிறோம். இயேசுவே இதை நமக்குக் கூறியிருக்கிறார். சிறியோராகிய என் சகோதர, சகோதரிகளுக்கு நீங்கள் செய்வதெல்லாம், எனக்கேச் செய்கிறீர்கள் (மத். 25: 31-46)

உடல் சார்ந்த இரக்கச் செயல்களுக்கு அடுத்ததாக, ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்களைச் சிந்திக்கிறோம். தடுமாறுவோருக்கு அறிவு புகட்டுதல், தெரியாதோருக்கு சொல்லித் தருதல், பாவிகளைத் திருத்துதல், துன்புறுவோரைத் தேற்றுதல், குற்றங்களை மன்னித்தல், வீண்பழிகளை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுதல், வாழ்வோர், மற்றும் இறந்தோருக்காக மன்றாடுதல்.

அரைகுறையாய் வாழ விருப்பமற்ற மக்கள், குறிப்பாக, உங்களைப் போன்ற இளையோர் இவ்வுலகிற்குத் தேவை. சமுதாயத்தில் மிகவும் வறுமைப்பட்டவர்கள், வலுவற்றவர்கள் ஆகியோருக்கு தன்னையே வழங்க முன்வரும் இளையோர் சமுதாயத்திற்குத் தேவை. பிறருக்குப் பணிபுரியாத வாழ்வு, கிறிஸ்தவ வாழ்வு அல்ல.

பிறருக்குப் பணியாற்றுவதில் முன்னிலை வகிக்கவேண்டும் என்று, இந்த மாலை நேரத்தில், மீண்டும் ஒருமுறை உங்களிடம் கேட்கிறார், இறைவன். நாம் வாழும் இன்றைய உலகில், அவரது இரக்கம் நிறை அன்பின் அடையாளங்களாய் வாழ உங்களிடம் கேட்கிறார்.

தன்னையே முழுவதும் தியாகம் செய்ததன் வழியே, நாம் எவ்விதம் இப்பணியைச் செய்யமுடியும் என்பதைக் காட்டுகிறார், இயேசு. முழுமையான அர்ப்பண உணர்வோடு, இயேசுவைப் பின்பற்ற, சிலுவைப்பாதை ஒரு வழியாக அமைகிறது.

சிலுவைப் பாதை மட்டுமே பாவத்தையும் தீமையையும், சாவையும் வெல்கிறது. அதுவே நம்பிக்கையின் வழி, எதிர்காலத்தின் வழி. இந்த வழியை ஏற்று, பின்பற்றுவோர், மனித சமுதாயத்திற்கு நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் தருகின்றனர்.

அன்பு இளைய நண்பர்களே, முதல் புனித வெள்ளியன்று, பல சீடர்கள், மனம் உடைந்து, தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். இன்னும் சிலர், சிலுவையை மறப்பதற்காக, நகரை விட்டே கிளம்பினர். நான் உங்களிடம் கேட்கிறேன்: இந்தச் சிலுவைப் பாதையின் இறுதியில், நீங்கள் எவ்விதம், உங்கள் இல்லங்களுக்கு, நீங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்ல விரும்புகிறீர்கள்? இந்தக் கேள்விக்கு நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே பதில் சொல்ல வேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.