2016-07-30 16:06:00

போனியே பூங்காவில் சிலுவைப் பாதை பக்திமுயற்சி


ஜூலை,30,2016. உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் ஓர் உச்ச நிகழ்வாக அமைவது, சிலுவைப் பாதை நிகழ்ச்சி. போனியே பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சிலுவைப் பாதை நிகழ்ச்சி, சோகம் நிரம்பிய ஒரு நிகழ்வாக அமையாமல், ஆடல், பாடல்களுடன், இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. 6 இலட்சம் பேர் பங்குபெறுவர் என்று எதிர்பார்த்திருந்த இந்நிகழ்வில், 8 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் முக்கியப் பரிந்துரையாக வழங்கப்பட்டுள்ள உடல் சார்ந்த 7 இரக்கச் செயல்கள், மற்றும் ஆன்மிகம் சார்ந்த 7 இரக்கச் செயல்கள் ஆகிய 14 செயல்கள், சிலுவைப் பாதையின் 14 நிலைகளின் மையக் கருத்துக்களாக, இளையோருக்கு வழங்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, இயேசு மரணத்திற்குத் தீர்ப்பிடப்பட்ட முதல் நிலை, வீடற்றோருக்கு புகலிடம் என்ற மையக் கருத்துடன் நடத்தப்பட்டது. San Egidio பிறரன்பு அமைப்பு வழிநடத்திய முதல் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளையோர் பலர் கலந்துகொண்டனர். சிலுவைப் பாதையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகில் நிகழும் துன்பங்கள் நடுவே, 'கடவுள் எங்கே?' என்ற கேள்வி நமக்குள் எழுகிறது என்ற எண்ணத்துடன் தன் உரையை வழங்கினார்.

சிலுவைப்பாதை பக்தி முயற்சிக்குப் பின், இளையோர், கிரக்கோவ் நகரின் மையச் சதுக்கத்தில் கூடி வந்தனர். Piotr Rubik என்ற புகழ்பெற்ற இசைக் கலைஞரின் இசை நிகழ்ச்சியை, இச்சதுக்கத்தில் Aid to the Church in Need அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

உலகில் துன்புறும் கிறிஸ்தவர்கள் பற்றிய இந்த இசை நிகழ்ச்சியில், போலந்து  நாட்டில் கம்யூனிச அரசால் கொலை செய்யப்பட்ட அருளாளர் Jerzy Popiełuszko என்ற அருள் பணியாளரின் கருத்துக்கள் பாடல் வடிவில் இடம்பெற்றன.

2010ம் ஆண்டுவரை உள்ள கணக்கெடுப்பின்படி, உலகில் இதுவரை 7 கோடிக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மறை சாட்சிகளாக உயிரிழந்துள்ளனர். இவர்களில், 4 கோடியே, 50 இலட்சம் பேர் 20ம் நூற்றாண்டில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வோர் ஆண்டும் 1,50,000 முதல், 1,70,000 பேர் தங்கள் மத நம்பிக்கைக்காக கொல்லப்படுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.