2016-08-01 17:21:00

இஸ்லாமை பயங்கரவாதத்தோடுத் தொடர்புப்படுத்துவது தவறு


ஆக.01,2016. பயங்கரவாதத்தை இஸ்லாமிய மதத்தோடு தொடர்புப்படுத்தி குற்றம் சாட்டுவது தவறு என்றும், இன்றைய பயங்கரவாதங்களுக்கு சமூக அநீதிகளும், பணமே தெய்வமெனக் கருதி வழிபடும் நிலைகளும் முக்கியக் காரணங்களாக உள்ளன எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு திருத்தூதுப்பயணத்தின்போதும், விமானத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்முறையும் போலந்திலிருந்து திரும்பிய இரண்டு மணிநேர விமான பயணத்தில், தீவிரவாதம், இன்றைய ஐரோப்பிய இளைஞர்களின் நிலை, திருப்பீட அதிகாரி கர்தினால் ஜார்ஜ் பெல், திருப்பலி மேடையில் தான் கால் இடறி வீழந்தது, பணத்தை வழிபடும் நிலை,  போன்றவை குறித்து தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பிரான்ஸ் நாட்டில் முதிய அருள்பணியாளர் Jacques Hamel அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, வன்முறையோடு இஸ்லாம் மதத்தை தொடர்புபடுத்திப் பார்ப்பது தவறு மட்டுமல்ல, அது உண்மையுமல்ல என்றார்.

எல்லா மதத்திலும் அடிபடைவாதக் குழுக்கள் உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்ற திருத்தந்தை, ஒவ்வொரு நாளும், கத்தோலிக்க நாடான இத்தாலியின் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உறவுகளுக்கிடையேயான கொலைகளாக இருப்பதையும் நினைவூட்டினார்.

மனிதனைவிட பணத்தைப் பெரிதாக எண்ணி வழிபடுவது என்பது, பயங்கரவாதத்திற்கான ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோருக்கு போதிய பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்காதிருப்பதும் பயங்கரவாதக் குழுக்களுக்கு அவர்களை இட்டுச்செல்ல வழிவகுக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

போலந்தில் இடம்பெற்ற திருப்பலியின்போது, தூபம் காட்டிக்கொண்டு மேடையில் வந்தபோது, தன் பார்வை அன்னை மரி திருஉருவத்தின்மேல் இருந்ததால், படிகளைக் கவனிக்கவில்லை, அதனாலேயே தான் கால் இடறி விழ நேர்ந்தது எனவும், அதனால் எவ்வித எதிர்மறை பாதிப்பும் தனக்கு இல்லை எனவும், அந்நிகழ்ச்சி குறித்தக் கேள்விக்குப் பதிலளித்தார் திருத்தந்தை.

ஆஸ்திரேலியாவில், கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்கள், சிறுவர்களை பாலின முறையில் தவறாக நடத்தினார் என்று வெளியாகியுள்ள புகார்கள் குறித்து தற்போது தன்னால் எதுவும் சொல்ல இயலாது என்று கூறியத் திருத்தந்தை, இது குறித்து விசாரித்து வரும் அந்நாட்டு நீதிமன்றத்தின் முடிவுகளைக் கேட்டபின்னரே, தன் கருத்துக்களை வழங்க உள்ளதாகவும் கூறினார்.

இத்திருத்தூதுப்பயணத்தின்போது திருப்பயண நடவடிக்கைகளைக் குறித்து செய்தி அனுப்ப வந்திருந்த இத்தாலிய அரசு தொலைக்காட்சி RAIன் பணியாளர் Anna Maria Jacobini அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த சமூகத்தொடர்பாளரின் சகோதரியையும் சில உறவினர்களையும் ஞாயிறுகாலை போலந்தில் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.