2016-08-01 17:15:00

போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக இலங்கையில் பாதயாத்திரை


ஆக.01,2016. இலங்கையில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் தலைமையில், புத்த, இஸ்லாமிய, இந்து மற்றும் கிறிஸ்தவ தலைவர்களும் மக்களும் ஒன்றிணைந்து பாத யாத்திரை ஒன்றை மேற்கொண்டனர்.

இராகம பசிலிக்கா மைதானத்தில் இருந்து துவங்கிய இந்த பல்மத ஊர்வலத்தின் இறுதியில் உரையாற்றிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், இலங்கையில் மூலைமுடுக்கெல்லாம் பரவி, வருங்கால சமுதாயத்தின் வாழ்வைச் சீரழிக்கும்  போதைப் பொருள் பயன்பாட்டை ஒழித்துக்கட்ட பாடுபடுவது, அனைத்துப் பொதுமக்களின் கடமையாகும் என்று வலியுறுத்தினார்.

போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்களை அறிந்திருப்பவர்கள், உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அவற்றை எடுத்துச்செல்லுமாறும் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார் கர்தினால் இரஞ்சித்.

அண்மைக்காலமாக, மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே காணப்படும் போதைப்பொருள் பயன்பாட்டைக் குறித்து கவலையை வெளியிட்டு, அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறார், கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித்.

ஆதாரம் : TamilWin/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.