2016-08-03 16:11:00

ஜப்பானில் ஆகஸ்ட் 6 முதல் 15 முடிய 'அமைதிக்கான பத்து நாட்கள்'


ஆக.03,2016. ஆகஸ்ட் 6ம் தேதி முதல், 15ம் தேதி முடிய 'அமைதிக்கான பத்து நாட்கள்' என்ற கருத்துடன், அந்நாட்களைக் கடைபிடிக்க, ஜப்பான் ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

திருத்தந்தை புனித  2ம் ஜான்பால் அவர்கள், 1981ம் ஆண்டு, ஹிரோஷிமா நகருக்குச் சென்றபோது, அமைதிக்கென விடுத்த சிறப்பு விண்ணப்பத்தைத் தொடர்ந்து, கடந்த 35 ஆண்டுகளாக ஜப்பான் ஆயர் பேரவை, 'அமைதிக்கான பத்து நாள்' நினைவைக் கடைப்பிடித்து வருகிறது.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற வேளையில், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய இரு நாட்களில், ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை அழித்த அணுகுண்டு தாக்குதல்களின் நினைவாக, இவ்விரு நாட்களையும் உள்ளடக்கி இந்த பத்து நாள் நினைவு கடைபிடிக்கபப்டுகிறது.

ஜப்பான் ஆயர் பேரவையின் தலைவரான நாகசாகி பேராயர், Joseph Mitsuaki Takami அவர்கள் அனுப்பியுள்ள இம்மடலில், Shalom என்ற எபிரேயச் சொல்லுக்கு, 'அமைதி' என்பது மட்டும் பொருளல்ல, மாறாக, அந்த அமைதியை உருவாக்க உதவும், வளமை, முழுமை, நீதி, நலவாழ்வு என்ற பல அம்சங்களும் இந்தச் சொல்லில் பொதிந்துள்ள அர்த்தங்கள் என்று பேராயர் Takami அவர்கள் இம்மடலில் கூறியுள்ளார்.

யாரையும் ஒதுக்கிவிடாமல், அனைவரையும் இறைவனின் இரக்கம் என்ற அரவணைப்பிற்குள் கொணரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்தையும் பேராயர் Takami அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.