2016-08-05 15:24:00

மனித வர்த்தகத்திற்கு எதிரான முயற்சியில் பிரேசில் துறவியர்


ஆக.05,2016. பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோவில் துவங்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களையொட்டி, அந்நாட்டின் கத்தோலிக்கத் துறவியர் இணைந்து, மனித வர்த்தகத்திற்கு எதிரான ஒரு முயற்சியைத் துவங்கியுள்ளனர்.

இந்த விளையாட்டு காலத்தில் இளம் சிறுவர், சிறுமியர் பாலியல் வழியில் தவறாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து, "வாழ்வுக்காக குரல்கொடுத்தல்" மற்றும், "வாழ்வுக்காக விளையாடுதல்" என்ற இரு அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து, போராட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ரியோ நகரில் உலகக் கால்பந்தாட்டம் நடைபெற்ற வேளையில், இக்குழுவினர், சிறுவர், சிறுமியரைக் காக்க மேற்கொண்ட போராட்டம் ஓரளவு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஒலிம்பிக் விளையாட்டு காலத்திலும் இந்த முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மனித வர்த்தகத்திற்கு எதிராக பிரேசில் நாட்டில் இயங்கிவரும் 26 அமைப்புக்கள், சிறுவர் சிறுமியரை பாலியல் மற்றும் போதைப்பொருள் கொடுமைகளிலிருந்து காப்பதோடு, அவர்களுக்குத் தேவையான கல்வியையும் வழங்கி வருகின்றன என்று வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.