2016-08-06 17:38:00

ஜெர்மனியில் ஆலயத் திருமணங்கள், திருமுழுக்குகள் அதிகரிப்பு


ஆக.06,2016. அண்மைய ஆண்டுகளில், ஜெர்மனி தலத்திருஅவையில் பொதுநிலையினரின் ஈடுபாடு குறைந்துவருகிறது என்ற கவலை வெளியிடப்பட்டுவரும் நிலையில், கடந்த ஆண்டு, ஆலயங்களில் இடம்பெற்ற திருமணம், மற்றும், திருமுழுக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஒரு புள்ளிவிவர அறிக்கை கூறியுள்ளது.

ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகையின் 29 விழுக்காட்டினை, அதாவது, 2 கோடியே, 37 இலட்சம் மக்களைக் கொண்டுள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவையில், கடந்த ஆண்டு இடம்பெற்ற திருமணங்கள், மற்றும் திருமுழுக்குகளின் எண்ணிக்கை, அதற்கு முந்திய சில ஆண்டுகளைவிட அதிகம் என்று, அண்மையப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

திருஅவையை விட்டு வெளியேறிய கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டில் குறைவு எனக்கூறும் இப்புள்ளிவிவர அறிக்கை, கடந்த ஆண்டு திருஅவையில் இணைய விரும்பியவர்களின் எண்ணிக்கை, 6474 எனவும், இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட, 160 பேர் அதிகம் என்றும் கூறுகிறது.

2014ம் ஆண்டில் 1,64,833 என்ற எண்ணிக்கையில் இருந்த திருமுழுக்குகள், 2015ம் ஆண்டில், 1,67,226 ஆக உயர்ந்துள்ளதாகவும், ஆலயங்களில் நிகழும் திருமணங்கள், 44,158 என்ற எண்ணிக்கையிலிருந்து, 44,298 என்ற எண்ணிக்கைக்கு உயரந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இப்புள்ளி விவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Reinhard Marx அவர்கள், திருஅவையின் மேய்ப்புப்பணி நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கவேண்டும் என்ற அழைப்பை, இப்புள்ளிவிவரங்கள் தருகின்றன என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.