2016-08-06 17:30:00

போதைப்பொருள் வர்த்தகத்தில் உருகுவே சிறுவர்கள்


ஆக.06,2016. உருகுவே நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் என்பது, குடும்பங்களுக்குள் புகுந்து, குழந்தைகளையும் போதைப்பொருள் வர்த்தகர்களாக மாற்றியுள்ளதென்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கவலையை வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருள்கள், குடும்ப அமைப்பு முறையிலும் ஊடுருவி, வேர்விட்டுள்ளது என உருகுவே ஆயர்களின் இணையத் தளத்தில் தன் கவலையை வெளியிட்டுள்ள அந்நாட்டு சால்டோ மறைமாவட்ட ஆயர், பாப்லோ காலிம்பெர்ட்டி (Pablo Galimberti) அவர்கள், குடும்பத் தலைவர், போதைப்பொருள் கடத்தலுக்காகக் கைது செய்யப்படும்போது, பொருளாதாரக் காரணங்களுக்காக, கடத்தல் தொழிலை, அவரது குழந்தைகள் தொடரவேண்டிய நிலை உருவாகிறது என்று கூறியுள்ளார்.

பள்ளி மாணவர்கள்போல் உடையணிந்த சிறுவர்கள், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, அவர்களது வருங்காலம் மற்றும் சமூக ஒழுங்குமுறை குறித்த அச்சம் எழுவதாகவும், போதைப்பொருள் கடத்தல் தொழிலிலிருந்து சிறுவர், சிறுமியரைக் காப்பாற்ற வேண்டிய அவசரத் தேவை உள்ளதாகவும், உருகுவே ஆயர் பேரவையின் இணையத்தளத்தில் ஆயர் காலிம்பெர்ட்டி அவர்கள் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.