2016-08-08 15:25:00

இரக்கத்தின் ஆண்டில் மலாவி அரசியல்வாதிகளின் இரக்க நடவடிக்கை


ஆக.08,2016. இந்த சிறப்பு யூபிலி ஆண்டில், இரக்கத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பிற்கிணங்க, பெற்றோர் அற்ற அநாதை சிறார்களுக்கென இயங்கிவரும் இல்லத்திற்கு உணவு உதவிகளை வழங்குவதாக, மலாவி நாட்டு கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அறிவித்துள்ளனர்.

அன்னை தெரேசாவின் பிறரன்பு சகோதரிகள் சபையால் நடத்தப்படும் ஆதரவற்ற சிறார் இல்லத்திற்கு உணவு உதவிகளை வழங்கியதைத் தொடர்ந்து, கத்தோலிக்க பாராளுமன்ற அங்கத்தினர்கள் சார்பில் செய்தி வெளியிட்டுள்ள பாராளுமன்ற அங்கத்தினர் Francis Kasaila அவர்கள், இந்த யூபிலி ஆண்டில் ஏழைகளுக்கு உதவும் எங்கள் கடமையை உணர்ந்து, இச்செயலை ஆற்றுவதாகத் தெரிவித்தார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பெரிய அளவில் உதவிகளைச் செய்து வரும் அன்னை தெரேசாவின் துறவுசபை அருள்சகோதரிகளுக்கு, மலாவி கத்தோலிக்க பாராளுமன்ற அங்கத்தினர்களின் சிறிய உதவி இது என தெரிவித்த Kasaila அவர்கள், அரசியல் வேறுபாடுகளையும் தாண்டி கத்தோலிக்கர்கள் என்ற முறையில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த உதவியை செய்ய முடிந்துள்ளது என்றார்.

மலாவி கத்தோலிக்க பாராளுமன்ற அங்கத்தினர்களின் இந்த செயல் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்ட, மலாவி ஆயர் பேரவையின் பாராளுமன்ற தொடர்பு அதிகாரி அருள்பணி Henry Chinkanda அவர்கள், அரசியல் வேறுபாடுகளையும் தாண்டி, ஒருவருக்கொருவர் அன்பு கூருவதன் வழியாக பிறரன்பின் சான்றுகளாக விளங்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.