2016-08-08 15:16:00

இறைவனுக்காக இதயக் கதவை திறந்து வைப்போம்


ஆக.08,2016. தன் தலைவரின் வருகைக்காக இரவு கண்விழித்துக் காத்திருக்கும் வேலையாள்போல, விசுவாசத்தில் இறைவனுக்குப் பணிவிடைப் புரிய காத்திருப்போர் பேறுபெற்றோர் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் எடுத்துரைத்த 'விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்' என்ற உவமைகள் குறித்து தன் கருத்துக்களை, உரோம் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் இதயக் கதவை தினமும் தட்டிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு, அக்கதவை திறக்கும்போது, நாம் பெரிய வெகுமதியைப் பெறுவோம் என்றும், அவர் நமக்கு சேவை புரிபவராக மாறுவதே அந்த வெகுமதி என்றும் கூறினார்.

இறைவனுக்காகக் கண்விழித்து காத்திருப்பவர்களுக்கு, வாழ்வே பரிசாகக் கிட்டுகின்றது, அத்தகைய வாழ்வைப் பெறுவதற்கு நாம் எப்போதும் பிறருக்கு சேவையாற்ற தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருடன் வரும் நேரம் தெரிந்த பணியாட்கள், திருட்டைத் தடுக்க விழிப்புடன் காத்திருப்பதுபோல், இயேசுவின் சீடர்கள் அனைவரும், எப்போதும், இறைமகனின் வருகைக்காக காத்திருக்க வேண்டும் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைவரின் வருகையில் ஏற்படும் தாமதத்தை தனக்குச் சாதகமாக்கி, ஏனைய பணியாளர்களை அடித்துத் துன்புறுத்தும் தலைமைப் பணியாளன்போல் செயல்படுவதாலேயே இன்றைய உலகில் அநீதி, வன்முறை, சூதுவாது போன்றவை பிறந்துள்ளன எனவும் எடுத்துரைத்தார்.

மேலும் நீதி நிறைந்த ஓர் உலகை உருவாக்கி நம் ஏழை சகோதர சகோதரிகளின் வாழ்வை மேம்படுத்துவோம் எனவும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.